2017-05-29 15:31:00

பாசமுள்ள பார்வையில்.. எந்நேரமும் கண்காணிக்கும் அன்னை மரியா


804 மீட்டர் உயரமுடைய ஃபிகோஞ்ஞா (Figogna) என்ற மலை, இத்தாலி நாட்டின் வடமேற்கிலுள்ள, புகழ்பெற்ற ஜெனோவா துறைமுக நகருக்கு ஏறக்குறைய இருபது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையிலுள்ள, அன்னை மரியா  திருத்தலம், இத்தாலியில் திருப்பயணிகள் அதிகமாகச் செல்லும் திருத்தலங்களில் ஒன்றாகும். மத்திய காலத்தில், ஜெனோவா துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களையும், படைகளையும் இந்த ஃபிகோஞ்ஞா மலையிலிருந்து கண்காணித்து வந்தனர். இதனால், இத்திருத்தலம், கண்காணிப்பு அன்னை திருத்தலம் (Nostra Signora della Guardia) என அழைக்கப்படுகின்றது. இத்திருத்தலத்திற்கு ஒரு வரலாறும் உள்ளது. 1490ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, பெனெதெத்தோ பரேத்தோ (Benedetto Pareto) என்ற விவசாயிக்கு, அன்னை மரியா தோன்றி, இந்த ஃபிகோஞ்ஞா மலையில் தனக்கென ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக்கொண்டார். இதைக் கேட்டு வியப்படைந்த பரேத்தோ அவர்கள், நானோ ஏழை, ஆலயத்தை என்னால் கட்ட இயலாது என்று சொன்னார். அதற்கு அன்னை மரியா, அஞ்ச வேண்டாம் என்று, அவரிடம் சொன்னார். அன்று வீடு திரும்பிய பரேத்தோ அவர்கள், இக்காட்சி பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சில நாள்கள் கழித்து, பரேத்தோ அவர்கள் ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அன்னை மரியா மீண்டும் அவருக்குத் தோன்றினார். அவரும் அற்புதமாக குணமடைந்தார். இந்த நிகழ்வுக்குப் பின், அவர், அன்னை மரியா தனக்குத் தோன்றி கேட்டுக்கொண்டது பற்றி, எல்லாரிடமும் கூறி, ஆலயம் கட்டுவதற்கு உதவி கேட்டார். அன்னை மரியா தோன்றிய இடத்தில் முதலில் சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டினார் பரேத்தோ. அங்குச் செல்லும் திருப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அவ்விடத்தில் பெரிய ஆலயம் கட்டப்பட்டு, 1890ம் ஆண்டு மே 26ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. பின்னர், பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, 1903ம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. ஜெனோவாவைச் சேர்ந்த திருத்தந்தை 15ம் பெனடிக்ட், 1915ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, இந்த ஆலயத்தை பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார். திருத்தந்தையர் புனித 2ம் ஜான் பால் (செப்.22,1985), 16ம்  பெனடிக்ட் (மே,18,2008) ஆகிய இருவரும், இத்திருத்தலத்திற்குச் சென்றுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 27, கடந்த சனிக்கிழமையன்று இத்திருத்தலத்தில் ஜெனோவா பகுதி இளையோரைச் சந்தித்தார்.

அன்னை மரியா, தாய்க்குரிய பாசத்துடன், எவ்வேளையிலும் நம்மைக் கண்காணித்து பராமரித்து வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.