2017-05-29 15:41:00

வாரம் ஓர் அலசல் – அசத்தும் அசாதாரண மனிதர்கள்


மே,29,2017. தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில், விநோதமான பழங்குடியினர் வாழ்ந்து வருவது சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் மேலாடை அணியும் வழக்கமில்லை. எந்த மொழியையும் அறிந்திராத இவர்களிடம், தங்களுக்கென்று பெயர்கள்கூட இல்லை. முகத் தாடையில், கொம்பு உள்ள விநோத மனிதர்களாக இம்மக்கள் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று, பிறந்த சில நிமிடங்களிலேயே செவிலியர் ஒருவரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சியை, இந்நாள்களில் சமூக வலைதளங்களில் பார்த்தோம். இந்தக் காணொளியை, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர், மே 26, கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

இரண்டு கைகளுமே இல்லாத ஓர் இளம்பெண், தன் காலை, கையாகப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுவதையும், வாகனத்திற்குத் தனது காலின் உதவியாலே எரிபொருள் நிரப்புவதையும், கால்விரல்களுக்கிடையில் இரண்டு குச்சிகளை வைத்து உணவை எடுத்து சாப்பிடுவதையும் ஒரு காணொளியில் பார்த்து வியந்தோம்.

தமிழகத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 99 வயது நிரம்பிய ஞானம்மாள் அவர்கள், இந்த வயதிலும் யோகா கலையில் அசத்துகிறார். இந்தியக் குடியரசுத்தலைவரின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் ஞானம்மாள் அவர்கள், இந்தியாவின் மிக வயதான யோகா ஆசிரியருமாவார்.

சேலத்தைச் சேர்ந்த, மூன்றரை வயது சிறுமி Nethra Roller அவர்கள், தாய்லாந்து நாட்டில் நடந்த பன்னாட்டு Skating விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து, நான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான, 'ஸ்கேட்டிங்' போட்டியில் பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும், தமிழகச் சிறுமி நேரா பெற்றுள்ளார்.

வாழப்பாடியைச் சேர்ந்த, 99 வயது நிரம்பிய முத்துசாமி என்ற முதியவர், இந்த வயதிலும், 190 கிலோ எடை கொண்ட மனிதர்களைக்கூட, தன் வர்மக் கலை உதவியுடன் எளிதாகத் தூக்கி, நோய்களை குணப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, பூச்சி உள்ளிட்ட நச்சு உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்களையும், நெருப்பினால் பாதிக்கப்பட்டவர்களையும் காப்பாற்றி வருகிறார். மேலும், இவர், அதிக எடையுடன் வருபவர்களின், எடையைக் குறைத்து, குணப்படுத்தி வருகிறார். இந்த வர்மக்கலைக்கு கட்டணம் எதுவும், அவர் வசூலிப்பதில்லையாம்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிளோரிடா மாநிலத்தில், நீர் மூழ்கியாளர்கள் மற்றும், Snorkels அணிந்த நீச்சலாளர்கள் என, ஏறக்குறைய ஐந்நூறு பேர், கடலுக்கடியில் இசை கச்சேரி நடத்தியுள்ளனர். இவர்கள், இடைவேளை இன்றி, நான்கு மணி நேரங்கள்வரை, பாடல்களால் அசத்தியிருக்கின்றனர். இதனை உள்நாட்டு வானொலியும் ஒலிபரப்பு செய்துள்ளது.

உலகெங்கும் ஒவ்வொரு துறையிலும், வயது வேறுபாடின்றி மனிதர்கள் பலர், தங்களின் அசாதாரண திறமைகளால் சாகசங்களை நிகழ்த்தி, காண்போரை, வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்வதை ஊடகங்களில் வாசிக்கின்றோம். சாகசங்களால் அசத்தும் மனிதர்கள் தவிர, தங்களின் சமூக அக்கறை வழியாகவும், பலர் மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகின்றனர். இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கனமழை பெய்ந்து வருகிறது. இதில் பலியாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இச்செவ்வாயன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆயினும், கடும் வெப்பம் நிலவும் இக்கோடையில், பெரம்பலூர் மாவட்டம், அருமடல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறார் சிலர், கோடை விடுமுறையில் அந்த கிராமத்தில் பராமரிக்கப்படாமல் இருந்த பழமையான சிவன் கோயிலில் உள்ள புதர்களை அகற்றி, சுத்தம் செய்து சீரமைத்து வருகின்றனர். மேலும், கோயிலைச் சுற்றி பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அவற்றுக்கு ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண் எடுத்து வந்து ஊட்டம் தருகின்றனர். ஊரில் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களையும், செடிகளையும் அகற்றி வருகின்றனர். அருமடல் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் எனும் ஒன்பதாம் வகுப்பு மாணவர், ஊரில் உள்ள சக சிறுவர்களை இணைத்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து தினேஷ் தி இந்து நாளிதழுக்குக் கூறியபோது, “புதிய பயணம் நண்பர்கள் எனும் குழுவினர், எங்கள் ஊரில் செங்காமுனியார் கோயில் அருகில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர். அவர்களின் செயலைப் பார்த்த எனக்கு, நாமும் இதுபோல ஏதேனும் நல்ல காரியம் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. இதையடுத்து, ஊரிலுள்ள எனது பள்ளித் தோழர்கள், நண்பர்கள் ஆகியோரது உதவியுடன் இந்தப் பணிகளைச் செய்கின்றோம் என்று கூறியுள்ளார்.

திருநெல்வேலி அருகே, முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குளங்களைத் தூர்வாரும் பணியில் களமிறங்கி இருக்கிறார்கள். முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் மண்மேடிட்டு, மரம், செடி, புதர்கள் மண்டியிட்டு காணப்படுகின்றன. அரசுத் தரப்பில் குடிமராமத்து திட்டத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அத்திட்டத்தின்கீழ் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இங்குள்ள பொட்டல் பகுதியில், 15 ஏக்கர் பரப்பிலுள்ள 2 பெரிய மற்றும், 2 சிறிய குளங்களில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி, அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். மரங்களை வேரோடு அப்புறப்படுத்தும் பணி கடினமாக இருந்ததால், ஓர் இயந்திரத்தை வாடகைக்கு அமர்த்தி, இப்பணியை மேற்கொள்ள இளைஞர்கள் திட்டமிட்டனர். இதற்காக, இவர்கள் தாங்களாகவே முன்வந்து பணம் கொடுத்தனர். தற்போது, இவர்கள், இப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்(நன்றி- தி இந்து).   

இந்தியாவின் இராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் என்பவர், தனது இரு மகன்களான அருண், அல்பேஷ் ஆகிய இருவருக்கும் அண்மையில், திருமணம் நடத்தியுள்ளார். திருமணத் தயாரிப்பு நாள்களில், இவர், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, நீங்கள் திருமண அன்பளிப்புகளைப் பொருட்களாக அளிக்க வேண்டாம், விருப்பம் இருந்தால் இரத்த தானம் செய்யுங்கள்’அதுவே எங்கள் வீட்டுத் திருமணத்திற்கான மிகச் சிறந்த அன்பளிப்பு என அறிவித்தார். இந்தக் கோரிக்கை புதுமையாக இருந்தாலும், அவரது வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களில் பெரும்பாலானோர் கணிசமாக இரத்த தானம் செய்திருக்கிறார்கள் என, தி இந்து நாளிதழில், கடந்த வியாழனன்று ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. ராகேஷ் அவர்கள், தனது இளம் வயதில், விபத்தில் காயமடைந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை சிகிச்சையின் போது போதிய ரத்த தானம் கிடைக்காத காரணத்தால் இழக்க நேர்ந்தது. அந்த வேதனைதான் இரத்த தானம் குறித்த ராகேஷின் விழிப்புணர்வுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது. அன்றிலிருந்து, ராகேஷ் அவர்கள், இதுவரை, தான் நலமாக இருந்த காலங்களில் எல்லாம், மூன்று மாதங்களுக்கொருமுறை இரத்த தானம் செய்ய மறந்ததில்லை. தன் வீட்டுத் திருமணத்தில் இரத்த தான முகாம் நடத்தியுள்ள இவர், இரத்த தானம் செய்வதை மக்களிடையே பரப்புவதற்காக, ‘Raktdata Jeevandata Samooh’ என்ற சேவை அமைப்பு ஒன்றையும் தனியாகத் தொடங்கி மிகுந்த ஈடுபாட்டுடன் அதை நடத்தி வருகிறார். 2012ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சேவை அமைப்பின் வழியாக, இதுவரை எண்ணற்றோர் பயன் பெற்றுள்ளனர். ராகேஷ் அவர்களை, மனத்தளவில் பாராட்டினோம். அன்பர்களே, இராஜஸ்தானில் நடந்த இந்த நற்செயல் போன்ற நல்ல காரியங்களை, உங்கள் வீட்டு விழா நிகழ்வுகளிலும் பரிந்துரைக்கலாமே.

நமது பிறப்பு, நம்மால் நடந்தது அல்ல. நமக்குப் பெயர் சூட்டியவர் நாமல்ல. நாம் உயர்ந்திருக்கும் நிலைக்கு காரணமும் நாமல்ல. நமது இறுதிச் சடங்கையும் நாம் நிறைவேற்றப் போவதில்லை. இவ்வாறு, இவ்வுலகில், நமது பிறப்பு முதல் இறப்புவரை, எல்லாமே பிறரால் நமக்குக் கொடுக்கப்படுகின்றன. பிறரைச் சார்ந்தே நாம் வாழ வேண்டியிருக்கின்றது. நாம் ஆற்றிய நற்காரியங்களே நம் இறுதி ஊர்வலத்தில் பெருமையடையும். இறக்கும்போது நாம் எடுத்துச் செல்வதும் எதுவுமில்லை. அப்படியிருக்கையில், நாம் ஏன் நம் வாழ்வை, எளிமையாக்கி, அன்பால் நிரப்பக் கூடாது? சமூக அக்கறையுள்ள மனிதர்களாக ஏன் நம்மை மாற்றக் கூடாது?

நாம் எல்லாரும் மகிழ்வான, மன நிம்மதியான வாழ்வையே விரும்புகிறோம். அதை அடையவே பலவாறு முயற்சி செய்கிறோம். வாழ்வில் நாம் அடையும் வெற்றிகள், நமக்கு மகிழ்வைத் தருகின்றனவா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால், மகிழ்வாகவுள்ள இதயம் நிச்சயமாக வெற்றியை நோக்கி நடத்திச் செல்லும். பெரியவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள். உலகம் உன்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காக நீ மலையில் ஏறாதே, ஆனால், நீ உலகைப் பார்க்க வேண்டுமென்பதற்காக மலையில் ஏறு. நீ சிகரத்தை எட்டியவுடன், மக்கள் உன்னை நோக்குவார்கள். உன் நற்காரியங்களைப் பார்ப்பார்கள். நீ பிறருக்கு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கும்போது அவர்கள் மாறமாட்டார்கள். ஆனால், வேறு வழியே இல்லை, இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று, உன்னால் அவர்கள் உணரும்போது மாறுவார்கள். விளம்பரம் வேண்டாம், புகழ் வேண்டாம், நம்மால் முடிந்தவரை செயல்பட்டால் போதும் என்ற நல்லுணர்வோடு, கல்விக்கு, நோய் குணமாக என, எத்தனையோ வழிகளில், எத்தனையோ நல்ல உள்ளங்கள், நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆதலால் சமூக அக்கறை கொண்டு, நற்செயல்களால் அசத்தும் இம்மனிதர்களில் நாமும் ஒருவராவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.