2017-05-30 15:32:00

இளையோர் குறித்து விவாதிக்கும் தேசிய நாள்


மே,30,2017. 2018ம் ஆண்டு, உலக ஆயர்கள் மாமன்றம், இளையோர் குறித்து விவாதிக்க உள்ளதன் முன்னோடியாக, மேய்ப்புப்பணி கலாச்சாரத்தின் 13வது தேசிய நாளை சிறப்பிக்க உள்ளது, போர்த்துக்கல் திருஅவை.

கலாச்சாரத்தோடு இளையோருக்கு இருக்கும் உறவு என்ற தலைப்பில் ஜூன் மாதம் 3ம் தேதி இத்தேசிய நாளை பாத்திமா நகரில் சிறப்பிக்க உள்ள போர்த்துக்கல் தலத்திருஅவை, 'இளையோரின் விசுவாசமும், அழைப்பை தேர்வு செய்தலும்'  என்ற மையக்கருத்துடன் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்னோடியாக இந்த தேசிய நாள் இருக்கும் என அறிவித்துள்ளது.

போர்த்துக்கல் தலத்திருஅவை சிறப்பிக்கவுள்ள இந்த 13வது கலாச்சார தேசிய நாள் மாநாட்டில், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பங்குதளங்களின் இளையோர் தலைவர்கள், மறைமாவட்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என எண்ணற்றோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்நாளில் தன் பணிவழியாக ஒழுக்க மற்றும் சமூக விவகாரங்களுக்கு சிறப்புப் பங்காற்றியதற்காக 'வாழ்வு மரம்'  என்ற விருது, அந்நாட்டின் நடிகரும் இயக்குனருமான Luís Miguel Sintra என்பவருக்கு, இந்த மாநாட்டின்போது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.