2017-05-30 15:12:00

எங்கும் பணியாற்ற எப்போதும் தயாராக இருத்தல்


மே,30,2017. தான் பணியாற்றும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல எப்போதும் தயாராக இருப்பவராக ஒரு அருள்பணியாளர் இருக்கவேண்டும், ஏனெனில் வரலாற்றின் மையம் அவரல்ல என்றும், அவர் சுதந்திரமானவர் என்பதை அவர் அறிவார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எந்த தீமைகளோடும் உடன்பாடு கொள்ளாமல், இறைவன் அனுப்பும் இடத்திற்கு பணியாற்றச்செல்ல தான் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று, தன் மந்தையிடமிருந்து தனக்கான எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழும் சுதந்திர மனிதராகிய மேய்ப்பருக்குத் தெரியும் என உரைத்தார்.

இச்செவ்வாய்க்கிழமை திருப்பலியின் முதல் வாசகமாகிய, திருத்தூதர் பணிகள் நூலில், புனித பவுல், தூய ஆவியாரின் கட்டளைக்கிணங்க தான் எருசலேமுக்குச் செல்வதாக கூறியதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒவ்வொரு மேய்ப்பரின் பணியும் எப்போதும் முழுமையடைந்ததாக இருக்கவேண்டும், பாதியில் விட்டுச் செல்வதாக அல்ல, என்றார்.

மந்தையுடன் ஒரு மேய்ப்பர் கொள்ளும் பிணைப்பு, இயேசுவின் சிலுவையால் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்கும்போது, அதனை விட்டுவிட்டு மற்றொரு இடத்திற்கு பணியாற்றச் செல்வது, இலகுவானதாக இருக்கும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எந்த ஒரு மேய்ப்பரும், தீயவைகளோடு உடன்பாடு கொள்ளாதவராகவும், அனுப்பப்படும் இடங்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி கீழ்ப்படிதலுடன் செல்பவராகவும், தன் வாழ்வுக்கு முக்கியத்துவம் தராதவராகவும் செயல்படவேண்டும் என மூன்று விதிகளை தன் மறையுரையில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மேய்ப்பர்களாகிய அருள்பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை என அனைவருக்காகவும் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.