2017-05-30 14:48:00

புருண்டி நாட்டு மக்கள் அண்மை நாடுகளில்


மே,30,2017. புருண்டி நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களால், அந்நாட்டிலிருந்து கடந்த இரண்டாண்டுகளில் 4 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தோராக அண்மை நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ள, புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. அமைப்பு UNHCR, மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள் போன்றவற்றால் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருவதாகத் தெரிவித்தது.

மிக அதிக எண்ணிக்கையில், அதாவது 2 இலட்சத்து 49,000 பேர் டான்சானியா நாட்டில் அடைக்கலம் தேடியிருக்க, ஏனையோர், ருவாண்டா, உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசிலும், முகாம்களில் வாழ்கின்றனர்.

புருண்டியில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவ 25 கோடி டாலர்கள் தேவைப்படும் என ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்திருக்க, இதுவரை அதில் 2 விழுக்காடே கிட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புருண்டி நாட்டின் அரசியலைப்பு, மற்றும், அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக, 2015ம் ஆண்டில் அரசுத்தலைவர் Pierre Nkurunziza அவர்கள், மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவான இராணுவத்திற்கும், சில கொரில்லாக் குழுக்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.

ஆதாரம் :  Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.