2017-05-31 16:17:00

காபூல் தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


மே,31,2017. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில், இப்புதனன்று நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இறந்தோர் நிறையமைதி பெறுவதற்கும், காயமுற்றோர் நலமடைவதற்கும், ஆப்கானிஸ்தான் நாடு அமைதியுடன் வாழ்வதற்கும் தன் செபங்களை அர்ப்பணிப்பதாக, திருத்தந்தை கூறியுள்ள இத்தந்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

மே 31, இப்புதனன்று காலை, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், அரசுத்தலைவர் மாளிகைக்கும், ஜெர்மன் தூதரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 300க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

கழிவு நீர் ஏற்றிவரும் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில், சாலையில் சென்றுகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மக்களே அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

இரமதான் மாதத் துவக்கத்தில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலுக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், தாக்குதலின் காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.