2017-05-31 16:35:00

நற்செய்தியை நோக்கி மனம் திரும்ப அழைக்கும் திருத்தந்தை


மே,31,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணியின் வழியே, புதியக் கொள்கைகளைச் சொல்லித்தருகிறார் என்பதைக் காட்டிலும், நற்செய்தியை நோக்கி நாம் மனம் திரும்ப அழைக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று, இத்தாலிய கர்தினால் ஒருவர் கூறினார்.

பிளாரன்ஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயரான, கர்தினால் ஜியூசெப்பே பெத்தோரி (Giuseppe Betori) அவர்கள், அருள்பணியாளர்கள் பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

மே 30, இச்செவ்வாய் முதல், ஜூன் 1, இவ்வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெறும் அருள்பணியாளர்கள் பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில், கர்தினால் பெத்தோரி அவர்கள், "திருத்தந்தை பிரான்சிஸ் எண்ணப்படி, ஒப்புரவு செய்யும் மேய்ப்பர்" என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

திருத்தந்தை வழங்கிவரும் தினசரி மறையுரைகள், அவர் வெளியிட்டுவரும் அறிக்கைகள், திருமடல்கள், அவர் மேற்கொள்ளும் பணிகள் அனைத்திலும், மனமாற்றமும், ஒப்புரவும், மையக்கருத்துக்களாக விளங்குகின்றன என்று கர்தினால் பெத்தோரி அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இரக்கத்தின் வெளி அடையாளமாக விளங்கும் ஒப்புரவு, மூவொரு இறைவனின் வெளிப்பாடாக அமையும் ஒப்புரவு என்ற தலைப்புக்களில் கர்தினால் பெத்தோரி அவர்கள் தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.