2017-05-31 16:43:00

நவம்பர் 4, அருளாளராக உயர்த்தப்படும் இறையடியார் இராணி மேரி


மே,31,2017. இறையடியாரான அருள்சகோதரி இராணி மேரி, நவம்பர் 4ம் தேதி, இந்தூரில் அருளாளராக உயர்த்தப்படுவார் என்று, பிரான்சிஸ்கன் கிளாரா துறவு சபையின் உலகத் தலைவர், அருள் சகோதரி ஆன் ஜோசப் அவர்கள் அறிவித்துள்ளார்.

உரோம் நகருக்கு வருகை தந்துள்ள அருள்சகோதரி ஆன் ஜோசப் அவர்கள், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்களைச் சந்தித்தபின் இத்தகவலை வெளியிட்டார் என்று, இத்துறவு சபையின் பொது ஆலோசகர் அருள் சகோதரி Strarley அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

கேரளாவில் பிறந்து, மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அருள் சகோதரி இராணி மேரி அவர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் போராடியதற்காக, 1995ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, கூலிப்படையைச் சேர்ந்த சமந்தர் சிங் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தன் குற்றத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட சமந்தர் சிங் அவர்களை, அருள்சகோதரி இராணி மேரியின் பெற்றோர், தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்சகோதரி இராணி மேரி அவர்களை புனிதராக உயர்த்தும் பணிகள் 2003ம் ஆண்டு துவக்கப்பட்டு, இவ்வாண்டு மார்ச் 23ம் தேதி, அவரை அருளாளராக உயர்த்தும் ஆணையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.