2017-06-01 15:43:00

இளம் அருள்பணியாளர்கள் குறித்து திருத்தந்தையின் உரை


ஜூன்,01,2017. இளம் அருள்பணியாளர்கள் உள்ளங்களில், ஆரம்ப ஆர்வமும், தொடர்ந்து அவர்கள் தங்கள் பணியில் சந்திக்கும் களைப்பும் ஒருசேர இடம்பெறுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த திருப்பீடத் துறையின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

அருள்பணியாளர்கள் பேராயத்தின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், இவ்வியாழன் காலை திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்தபோது, அருள்பணியாளர்களை உருவாக்கும் பணியில் உள்ள பல்வேறு சவால்களைக் குறித்து, திருத்தந்தை, தன் கருத்துக்களை, அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

தன் பணிகளிலிருந்து வரும் சவால்கள், மக்களிடமிருந்து வரும் எதிர்பார்ப்புக்கள், பொறுப்பிலிருந்து எழும் பாரம் என்ற பல கடினமான உண்மைகளை இளம் அருள்பணியாளர்கள் சந்திக்கவேண்டியுள்ளது என்று, திருத்தந்தை, தன் உரையில் எடுத்துரைத்தார்.

நுகர்வுக் கலாச்சாரத்தையும், சுயநலத்தையும் உயர்த்திப் பிடிக்கும் இவ்வுலகச் சூழலில் வாழும் இளம் அருள்பணியாளர்கள், நோக்கமற்றவர்களாக, சக்தியிழந்தவர்களாக தெரியக்கூடும் எனினும், அவர்களுக்குள் இருக்கும் உறுதியை வெளிக்கொணர்வது முக்கியம் என்று கூறினார், திருத்தந்தை.

இறைவனுக்குச் செவிமடுக்க மக்கள் மறுத்ததால், "ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த" (1 சாமுவேல் 3,1) அக்காலத்தில், சிறுவன் சாமுவேலை இறைவன் அழைத்தார் (1 சாமுவேல் 3, 1-10) என்பதைக் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளவயது தாவீதையும், (1 சாமுவேல் 16, 1-13) தான் வயதில் குறைந்தவன் என்று கூறிய எரேமியாவையும் அழைத்தார் என்று குறிப்பிட்டார்.

இளைய அருள்பணியாளர்களை தான் சந்திக்கும்போதெல்லாம், திருஅவை இளமை குறையாமல் இருப்பதை தன்னால் உணர முடிகிறது என்று கூறியத் திருத்தந்தை, களைப்பின்றி செபித்தல், உள்ளத்திலிருந்து வெளிப்படுவதை பிறருடன் பகிர்தல் ஆகிய பண்புகளை இளைய அருள்பணியாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அருள்பணியாளர்கள் தங்கள் பயணத்தில் களைப்பை உணரும்போது, அவர்களுடன், அன்னை மரியாவும் வழிநடக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தால், களைப்பு நீங்கி புத்துணர்வு பெறமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் பேராயப் பிரதிநிதிகளுக்கு வழங்கிய தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.