2017-06-01 16:15:00

தமிழகத்திற்கு நீர் கல்வி இயக்கம் அவசியம் - 'தண்ணீர் மனிதர்'


ஜூன்,01,2017. தமிழகத்தை வறட்சியற்ற மாநிலமாக மாற்ற வேண்டுமானால் நீர் கல்வி இயக்கத்தை (Water Literacy Movement) உருவாக்கி நடத்த வேண்டும் என்று தண்ணீர் மனிதர் இராஜேந்திர சிங் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இராஜேந்திர சிங் அவர்கள், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் வறட்சியை போக்கி, நீர்வளம் மிகுந்த இடமாக மாற்றியுள்ளார். இதனால் அவர் ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

தண்ணீர் பாதுகாப்பு, மற்றும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இரமோன் மகசேசே விருது, தண்ணீருக்கான நோபல் பரிசு என்றழைக்கப்படும் ’ஸ்டாக்ஹோம் நீர்’ பரிசு ஆகியவை இராஜேந்திர சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும், இராஜேந்திர சிங் அவர்கள், தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து ’தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு இராஜேந்திர சிங் அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறியது:

தற்போது தென் மாநிலங்கள் வறட்சியை சந்தித்துள்ளன. நாட்டுக்கு மிகப்பெரிய பேரிடராக வறட்சி மாறிவிட்டது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தற்போதைய வறட்சி இயற்கையானது அல்ல. மனிதரால், குறிப்பாக, அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் கூட வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது வாழ்க்கைக்கே அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது, பிராணவாயு குறைந்து, ஏனைய நச்சு வாயுக்கள் அதிகமாகிவிட்டன என்று கூறினார்.

தண்ணீரின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வதும், தண்ணீருக்கான மரியாதையை வழங்குவதும், தண்ணீர் மீது பற்று வைப்பதுமே வறட்சியைப் போக்க தற்போதுள்ள ஒரே உடனடித் தீர்வாகும் என்று கூறிய இராஜேந்திர சிங் அவர்கள், தமிழகத்தில் வறட்சியைப் போக்க தமிழக அரசு தன்னிடம் உதவி கோரினால், கட்டாயம் உதவி செய்வேன் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.