2017-06-01 15:48:00

பாசமுள்ள பார்வையில்.. எந்நிலையிலும் பிள்ளையை ஏற்கும் தாய்


இத்தாலியின் மிலான் நகரிலுள்ள அதிதூதர் மிக்கேல் மற்றும் புனித ரீத்தா பங்கு ஆலயச் சுவரில், சமூக விரோதி ஒருவர், “சுதந்திரமான கருக்கலைப்பு (மரியாவுக்கும்தான்)" என, கருக்கலைப்புக்கு ஆதரவான வார்த்தைகளை எழுதியுள்ளார். அந்த நபருக்கு, அந்த ஆலய பங்குத்தந்தை அந்திரேயா பெல்லோ அவர்கள், தனது முகநூலில் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம், மே 31, இப்புதனன்று ஊடகங்களில் வெளியானது.

ஆலயச் சுவரில் இந்த வார்த்தைகளை எழுதியுள்ள அன்பரே,

நீங்கள் உங்கள் தாயிடமிருந்து முன்மாதிரிகையை கற்றுக்கொள்ள தெரியாமல் இருந்தது குறித்து வருந்துகிறேன். உங்கள் தாய் துணிச்சல் மிகுந்தவர். ஏனென்றால் உங்களைக் கருத்தாங்கி, பத்து மாதம் சுமந்து, உங்களைப் பெற்றெடுத்துள்ளார். உங்களை அவர் கருக்கலைப்பு செய்திருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை. உங்கள் தாய் உங்களுக்குப் பாலூட்டி, உணவளித்து, குளிப்பாட்டி, சீராட்டி, ஆடை அணிவித்து வந்திருக்கிறார். இப்போது உங்களுக்கென ஒரு வாழ்வு இருக்கின்றது. அதுவும் சுதந்திரமான வாழ்வு. நீங்கள் பயன்படுத்தியுள்ள இச்சுதந்திரம், உங்களைப் போன்ற ஒரு மனிதர் இந்த உலகில் இல்லாமல் இருந்திருக்கலாம் என எங்களைச் சொல்ல வைத்துள்ளது. இப்படிச் சொல்வதற்காக நான் வருந்துகிறேன், ஆனால், நீங்கள் செய்திருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களின் தாயை நான் மிகவும் வியந்து நோக்குகிறேன். ஏனென்றால் உங்கள் தாய் துணிவானவராக இருந்திருக்கிறார். நீங்கள் உங்கள் தாயை எவ்வளவு புண்படுத்தினாலும், எல்லாத் தாய்மார் போலவே, அவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறார். காரணம், உங்கள் உள்ளத்தில் நல்லது ஒன்று உள்ளது, அது வெளிவர வேண்டும் என்பதற்காக. கருக்கலைப்பை எந்தவிதத்தில் நோக்கினாலும் அது அர்த்தமற்றது. ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியிலும், வாழ்வில் முன்னோக்கிச் செல்ல துணிவைக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்து வியக்கிறேன். உங்களிடம் இந்த்த துணிவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில் உம் எழுத்தில் நீவீர் யார் என்று தெரிவிக்கவில்லை. எங்கள் பகுதி ஏற்கனவே ஏராளமான பிரச்சனைகளால் நிறைந்துள்ளது. இவ்வாறு சுவர்களில் கிறுக்கி, இங்கிருக்கும் சிறிது அழகையும் கெடுத்துவிடும் மனிதர் எமக்குத் தேவையில்லை. நீர் துணிவுள்ளவராக காட்ட விரும்புகிறீரா? அப்படியானால், இந்த உலகை அழிக்கும் செயல்களில் ஈடுபடாமல், அதனை உன்னதமாக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். வெறுப்பைக் கைவிட்டு, அன்பை அணிந்துகொள்ளுங்கள். வேதனையுறும் மனிதருக்கு உதவுங்கள். வாழ்வை அழிக்காமல் அதனை வழங்குங்கள். இவைதான் உண்மையான துணிச்சல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.