சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

காலநிலை ஒப்பந்தம் பற்றிய டிரம்ப்பின் தீர்மானம் குறித்து..

சீனாவில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியாகும் புகை - AP

02/06/2017 16:10

ஜூன்,02,2017. பாரிஸ் நகரில் 2015ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாடு விலகிக்கொள்ளும் என, அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அறிவித்திருப்பது குறித்து, உலகெங்கும் கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஜூன் 01, இவ்வியாழனன்று டிரம்ப் அவர்கள் இவ்வாறு அறிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இந்தப் பாரிஸ் ஒப்பந்தம், உலகளாவிய பொதுநலனைக் கருத்தில் கொண்டது என்று கூறி, டிரம்ப் அவர்களின் இத்தீர்மானம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி மற்றும், அமைதி ஆணைக்குழுவின் தலைவர் ஆயர் Oscar Cantu அவர்கள் கூறுகையில், படைப்பையும், மனித சமுதாயம் முழுவதையும் பாதுகாக்க வேண்டுமென்ற விழுமியங்களை விவிலியம் உறுதி செய்கின்றது என்றும், பாரிஸ் உலக ஒப்பந்தம், இந்த விழுமியங்களை ஊக்குவிக்கின்றது என்றும் கூறினார்.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களின் இத்தீர்மானம், அமெரிக்க ஐக்கிய நாட்டையும், உலகையும், குறிப்பாக, மிகவும் வறிய சமூகங்களையும் பாதிக்கும் என்றும், கடல்மட்ட உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடும் புயல்கள், அடிக்கடி இடம்பெறும் வறட்சி போன்றவற்றில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஏற்கனவே உணரப்பட்டு வருகின்றன என்றும், ஆயர் Cantu அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப் அவர்களின் இத்தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் Stéphane Dujarric அவர்களும், கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைத்து, பாதுகாப்பை ஊக்குவிக்கும் உலகளாவிய முயற்சியில், பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு டிசம்பரில், பாரிஸ் மாநாட்டில் ஐ.நா.வால், கொண்டுவரப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் கையெழுத்திட்டன. அதை 137 நாடுகள் அமல்படுத்தியுள்ளன.  

ஆதாரம் : CNS/UN/வத்திக்கான் வானொலி

02/06/2017 16:10