2017-06-03 15:25:00

ஒன்றிணைந்து ஏழைகளின் நலனுக்காக உழைப்போம்


ஜூன்,03,2017. இறையியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுவரும்வேளை, நாம் ஒன்றிணைந்து ஏழைகளின் நலனுக்காக உழைப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் கூறினார்.

இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் அருங்கொடை இயக்கத்தின் 102 தலைவர்களை இச்சனிக்கிழமை முற்பகலில் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, நம் ஆண்டவர் விரும்பும், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்காக இச்சபையினர் ஆற்றும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.

பிறரன்புப் பணிகள், கல்விப் பணிகள் போன்றவற்றை ஒன்றிணைந்து ஆற்றுவோம், அவற்றில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்போம் எனவும் உரைத்த திருத்தந்தை, Circo Massimo திடலில் திருவிழிப்பு திருவழிபாட்டில் சந்திப்போம் எனவும் கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் நம் நம் மொழிகளில் வானகத்தந்தையை நோக்கிச் செபிப்போம் என்று கூறி, அச்செபத்தை இணைந்து சொல்லி, நன்றியுடன் இச்சந்திப்பை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, உரோம் நகரில் நடைபெற்றுவருகின்ற உலகளாவிய மாநாட்டில், இவாஞ்சலிக்கல் அருங்கொடை இயக்கத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.