2017-06-05 16:11:00

ஆன்மீகத்தையும், தொடர் பயணத்தையும் தூண்டும் மறைப்பணி


ஜூன்,05,2017. இவ்வாண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி உலகில் சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு தினத்திற்கென செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் இதயமாக மறைபரப்புப் பணி உள்ளதை தியானிக்க அழைக்கப்பட்டுள்ள நாம், முதல் நற்செய்தி அறிவிப்பாளரான இயேசுவை சுற்றி நிற்குமாறு நாம் அழைக்கப்படுகிறோம் என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, குழப்பங்களாலும், ஏமாற்றங்களாலும், உடன்பிறந்தோரிடையே உருவாகும் போர்களாலும் நிறைந்துள்ள இவ்வுலகில், கிறிஸ்தவர்களாகிய நாம், நம் தனித்தன்மை குறித்தும், கடமைகள் குறித்தும் சிந்திக்கவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

நம் மறைப்பணியின் அடிப்படை, அதன் இதயம், மற்றும் அணுகுமுறைகள் குறித்து சிந்திக்கவேண்டியதன் அவசியத்தையும் இச்செய்தியில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வழியாகவும், உண்மையாகவும், வாழ்வாகவும் இருக்கும் இயேசுவின் நற்செய்தியின் உருமாற்றும் வல்லமை மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கும் திருத்தந்தை, மறைப்பணி என்பது ஆன்மீகத்தையும், தொடர்ந்த பயணத்தையும் தூண்டுகிறது எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார்.

நற்செய்தி அறிவிப்பின் நம்பிக்கையாக இளையோர் உள்ளனர் எனவும், திருப்பீட மறைப்பணி இயக்கங்களின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், நற்செய்தி அறிவிப்பில் அன்னைமரியாவின் துணை குறித்தும், மேலும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை தன் செய்தியில்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.