2017-06-05 15:53:00

பிறரன்பின் உண்மை சாட்சிகள், மறைப்பணியாளர்கள்


ஜூன்,05,2017. பெரும் ஏழ்மை, மற்றும், துன்பங்கள் எனும் உண்மை நிலைகளை நேருக்கு நேர் காணும் மறைப்பணியாளர்கள், பிறரன்பின் உண்மை சாட்சிகளாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளாளர்  Giuseppe Allamano  என்பவரால் துவங்கப்பட்ட கொன்சலாத்தா ஆண், பெண் துறவு சபைகளின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு கண்டங்களில், பல்வேறு துன்பகரமான சூழல்களில் பணியாற்றும் இச்சபையினருக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

துறவியர் ஒவ்வொருவரும் அவருக்குள்ள தனிவரத்தை ஆழப்படுத்துவதுடன், நற்செய்தி அறிவிப்புக்கு புதுப்பிக்கப்பட்ட புது உந்துதலை வழங்குபவர்களாக, ஏழைகளிடையே மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக, மக்களுக்கு ஆறுதலைக் கொணர்பவர்களாக செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கவேண்டிய துறவியர் ஒவ்வொருவரும், இறைவனின் அன்பையும் கருணையையும் மீண்டும் கண்டுகொள்ள வேண்டிய தேவை உள்ளது எனபதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பல்வேறு தியாகங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும், இயேசுவுடன் நாம் கொள்ளும் உறவு எப்போதும் மகழ்ச்சியைக் கொணர்வதாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமூகங்கள் குறித்த பொறுப்புணர்வு, நர்செய்தியை, பண்பாட்டுமயமாக்குதலில் உள்ள கவனம், மறைப்பணியாளர்களிடையே ஒத்துழைப்பு, இஸ்லாமியருடன் கலந்துரையாடல், பெண்களின் மாண்பை முன்னேற்றல், குடும்ப மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்தல், நீதி, அமைதி விவகாரங்களில் தனிக்கவனம் போன்றவை குறித்தும் கொன்சலாத்தா ஆண் பெண் துறவு சபையினரிடம் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.