2017-06-05 15:58:00

மறைபரப்புப் பணிகளுக்கு தூய ஆவியாரின் உதவிகள்


ஜூன்,05,2017. எக்காலத்தையும் விட தற்போது, கிறிஸ்தவ மறைசாட்சிகளின் என்ணிக்கை பெருமளவில் இருப்பதாக இச்சனிக்கிழமை மாலை இடம்பெற்ற அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் பொன்விழாக் கூட்டத்தில் உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியார் பெருவிழாவுக்கு முந்தைய  திருவிழிப்பு வழிபாட்டில் அருங்கொடை இயக்கத்தினரை, உரோம் Circo Massimo திடலில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், எவாஞ்சலிக்கல் சபையினர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, விசுவாசிகள் பெருமளவில் கொலைச் செய்யப்பட்டுவரும் இன்றைய சூழலில், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது எக்காலத்தையும் விட அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்றார்.

கிறிஸ்தவ சபைகளுக்குள் வேறுபாடுகள் இருப்பினும், ஒப்புரவுடன்கூடிய பன்முகத்தன்மையைக் கொண்டவர்களாக,  இயேசுவே ஆண்டவர் எனவும், அமைதி என்பது இயலக்கூடியதே எனவும், நற்செய்தியை நாம் இணைந்து அறிவிக்க முடியும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாடப்படுவது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உதவித் தேவைப்படுபவர்களுக்கு ஆற்றும் பணியில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் செபத்திலும் செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்து நடைபோடுவார்களாக எனவும் கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்ற இரண்டு ஆண்டுகளுக்குப்பின், 1967ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாணவர் குழு ஒன்று ஆன்மீகத் தியானத்தில் ஈடுபட்டது. அத்தியானத்தில் அம்மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் பயனாக ஆரம்பிக்கப்பட்டதே அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம். இன்று இது, உலகளாவிய இயக்கமாக மாறி, 12 கோடிக்கு மேற்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.