2017-06-06 16:46:00

ஜிம்பாப்வே ஆயர்கள்: தேர்தலை நம்பகத்தன்மையுடையதாக்குங்கள்


ஜூன்,06,2017. வரும் ஆண்டில் ஜிம்பாப்வே நாட்டில் இடம்பெற உள்ள பொதுத் தேர்தலுக்கு மக்களை தயாரிக்கும் விதமாக, 'தேர்தலகள், அமைதி, வளர்ச்சி' என்ற தலைப்பில், மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

வன்முறைகளையும் எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் கைவிடுவோம், ஏனெனில் அச்சுறுத்தல்களின் துணையுடன் இடம்பெறும் தேர்தல், தன் நம்பகத்தன்மையை இழந்ததாகிவிடும், என தங்கள் அறிக்கையில் கூறும் ஆயர்கள், சுதந்திரமாக தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் அனுமதிக்கப்படவேண்டும் என அதில் கேட்டுள்ளனர்

மக்களின் அரசியல் உரிமைகளும், கருத்துச்சுதந்திரமும் மதிக்கப்படுவது உறுதிச் செய்யப்பட வேண்டும் என அரசுத் தலைவர் இராபர்ட் முகாபேக்கும் அந்த அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அரசியலமைப்பை மதித்துச் செயல்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

2008ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற பொதுத் தேர்தலையொட்டிய வன்முறைகள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், அடுத்த ஆண்டு தேர்தலுக்கான வழிகாட்டுதல்களை தற்போதே வெளியிட்டுள்ளனர், ஜிம்பாப்வே ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.