2017-06-06 14:09:00

பாசமுள்ள பார்வையில்: அன்னை ஏற்றிவைத்த ஒளி இன்னும் ஒளிர்கிறது


வறுமையில் வாடிய வயதான ஒருவரைச் சந்திக்கச் சென்றார், அன்னை தெரேசா. அந்த முதியவர் வாழ்ந்துவந்த அறை, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காற்றும், ஒளியும் புகமுடியாதவாறு அவர் அந்த அறையை அடைத்து வைத்திருந்ததால், துர்நாற்றம் வீசியது.

அன்னை அங்கு சென்றதும், அந்த அறையைச் சுத்தம் செய்து, சன்னலைத் திறந்துவிட்டு, காற்றும், ஒளியும் உள்ளே வரும்படி செய்தார். அன்னையின் முயற்சிகளை அந்த முதியவர் தடுக்கப்பார்த்தார். ஆனால், அன்னை விடுவதாக இல்லை.

அந்த அறையின் மூலையில் கிடந்த ஒரு பெட்டியில் அழகான எண்ணெய் விளக்கு ஒன்று இருந்தது. அழுக்கடைந்து கிடந்த அந்த விளக்கை அன்னை சுத்தம் செய்தபோது, "ஏன் இந்த விளக்கை நீங்கள் பயன்படுத்துவதில்லை?" என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், "நான் ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? என்னைப் பார்க்க யாரும் வருவதில்லை, நானும் யாரையும் பார்க்க விரும்புவதில்லை" என்று சலிப்புடன் கூறினார். அன்னை அவரிடம், "சரி, உங்களைச் சந்திக்க யாராவது இங்கு வந்தால், இந்த விளைக்கை ஏற்றிவைப்பீர்களா?" என்று கேட்க, அவர், "நிச்சயமாக. என் வாசலில் மனிதக் குரல் கேட்டதும், நான் இவ்விளக்கை ஏற்றிவைப்பேன்" என்று பதில் சொன்னார்.

அன்னை தெரேசா நிறுவிய துறவு சபையைச் சேர்ந்த இரு சகோதரிகள், அந்த முதியவரை அடிக்கடிச் சந்திக்கச் சென்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் அங்கு சென்றபோது, அந்த முதியவர் விளக்கை ஏற்றிவைத்தார். அவரது வாழ்வில் அழகான மாற்றங்கள் உருவாயின.

சில மாதங்கள் சென்று, அவர், அச்சகோதரிகளிடம், "சகோதரிகளே, உங்கள் வருகைக்கு நன்றி. இனி, நீங்கள் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறரோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையும், ஆவலும் எனக்கு வந்துவிட்டன. ஆனால், எனக்காக ஓர் உதவியைச் செய்யுங்கள். இந்த விளக்கை முதன் முதலில் ஏற்றிவைத்த அந்த அன்னையிடம், ‘என் வாழ்வில் அவர் ஏற்றிவைத்த ஒளி, இன்னும் ஒளிர்கிறது’ என்று மட்டும் சொல்லிவிடுங்கள். அது போதும்." என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.