2017-06-06 16:40:00

பெருங்கடல்களின் நலனைப் பாதுகாப்பது அனைவரின் கடமை


ஜூன்,06,2017. ஒவ்வொரு நாடும், தங்கள் நாடு, தங்கள் கடல்பகுதி என்ற குறுகியப் பார்வையை விட்டு வெளியேறி, கடல்கள் மீது பொதுவான அக்கறை காட்டவேண்டும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

'பெருங்கடல் கருத்தரங்கு' ஐ.நா. பொது அவையில், ஜூன் 5, இத்திங்களன்று முதன் முறையாக நடைபெற்ற வேளையில், அக்கருத்தரங்கின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

பெருங்கடல்களின் நலனைப் பாதுகாப்பது, நாடுகள் அனைத்தின் ஒருங்கிணைந்த முயற்சியாக மாறவேண்டும் என்றும், மனிதர்களால், கடல்களுக்கு இழைக்கப்பட்டுள்ள தீமைகளை, மனிதர்களாகிய நாம் மட்டுமே நீக்கமுடியும் என்றும் விண்ணப்பித்த கூட்டேரஸ் அவர்கள், இந்த இலக்கினை தவறவிடுவது, பூமிக்கோளத்திற்கே ஆபத்தாக முடியும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

பிஜி நாடும், சுவீடன் நாடும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த முதல் கருத்தரங்கில், பன்னாட்டு அரசுகளின் உயர்மட்ட தலைவர்கள், ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று வருகின்றனர்.

ஜூன் 5, இத்திங்கள் முதல், ஜூன் 9 இவ்வெள்ளி முடிய, பெருங்கடல் கருத்தரங்கு ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறுகிறது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.