2017-06-06 16:55:00

மதத்தை தன் நலனுக்காக பயன்படுத்த விரும்பும் ஆளும் கட்சி


ஜூன்,06,2017. மதங்கள் மீதுள்ள பகைமை உணர்வுடன், வியட்நாம் அரசால் அடுத்த ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட உள்ள வியட்நாம் நாட்டின் புதிய மத சட்டம் குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

பழைய சட்டத்தில் 'அனுமதி பெறுதல்' ‘அனுமதி கேட்டல்' என்றிருந்த வார்த்தைகளை மாற்றி, தற்போது, 'பதிவு செய்தல், தகவலறிவித்தல், பரிந்துரைத்தல்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதன் வழியாக எவ்வித பெரிய மாற்றமும் வந்துவிடவில்லை எனக் கூறும் ஆயர்கள், மத விடுதலை என்பது, மனித உரிமையாக நோக்கப்படாமல், அரசு விரும்பினால் அனுமதிக்கும் ஒரு கருணைச் செயலாக நோக்கப்படுகின்றது எனவும் குறை கூறியுள்ளனர்.

மத நிறுவனங்களை தன் நலனுக்காக மட்டும் பயன்படுத்த விரும்பும் ஆளும் கட்சி, மதங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், தேவையற்ற அளவில் பணத்தை விரயமாக்குகிறது எனவும் கூறியுள்ளனர் வியட்நாம் ஆயர்கள்.

நாட்டோடு இணைந்து பயணம் செய்தல் என்ற வார்த்தையை தன் புதிய மதசட்டத்தில் அடிக்கடி பயன்படுத்தும் வியட்நாம் அரசு, நாட்டோடு அல்ல, மாறாக, கம்யூனிச அரசோடு அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதையே விரும்புகிறது எனவும் தங்கள் அறிக்கையில் குறை கூறியுள்ளனர் ஆயர்கள்.

வியட்நாம் கத்தோலிக்கத் திருஅவை, அந்நாட்டில், 70 இலட்சம் விசுவாசிகளிடையே பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.