2017-06-07 16:14:00

ஐ.நா. பெருங்கடல் கருத்தரங்கில் கர்தினால் பீட்டர் டர்க்சன்


ஜூன்,07,2017. கடலின் செல்வங்களை அறுவடை செய்வதில் அதிக ஆர்வம் காட்டும் மனிதர்கள், கடலைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.அவையில் உரையாற்றினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஐ.நா. பொது அவையில் நடைபெற்றுவரும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் இச்செவ்வாயன்று மாலை ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

ஜூன் 5, இத்திங்கள் முதல், 9, வருகிற வெள்ளி முடிய ஐ.நா. அவை தன் வரலாற்றில் முதல் முறையாக நடத்தும் பெருங்கடல் கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றுவரும் கர்தினால் டர்க்சன் அவர்கள், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அரசுகளின் அவசரத் தேவை என்று வலியுறுத்திக் கூறினார்.

கடல் வாழ் உயிரினங்களையும், ஆழ்கடல் செல்வங்களையும் பாதுகாப்பது குறித்த சிந்தனை ஏதுமில்லாமல், அவற்றை அறுவடை செய்வதிலேயே மனிதர்கள் அதிகம் அக்கறை காட்டுவது ஆபத்தானது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கடலைப்பற்றி பேசும்போது, அங்கு பணியாற்றுவோர், கடலில் வாழ்வோர் ஆகியோரைக் குறித்தும் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களை தனிப்பட்ட வகையில் குறிப்பிட்டுப் பேசினார்.

கடல்களை பற்றி சிந்திக்கும்போது, உயர்ந்துவரும் கடல் மட்டம், நல்ல குடிநீரின் தட்டுப்பாடு ஆகிய உண்மைகளையும் அறிவுசார்ந்த முறையில் சந்திக்கவேண்டும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.