2017-06-07 16:54:00

கந்தமால் கிறிஸ்தவர்களின் சாட்சியத்தை உலகறியச் செய்வது கடமை


ஜூன்,07,2017. ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சார்ந்த கந்தமால் கிறிஸ்தவர்கள், தங்கள் துன்பங்களின் நடுவே வழங்கிய சாட்சியத்தை உலகறியச் செய்வது, அனைத்து இந்திய கிறிஸ்தவர்களின் கடமை என்று இந்திய கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் கூறினார்.

2008ம் ஆண்டு, கந்தமால் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறைகளைத் தொகுத்து ஆன்டோ அக்கரா (Anto Akkara) என்பவர் எழுதியுள்ள ஒரு நூலை, ஜூன் 6, இச்செவ்வாயன்று வெளியிட்ட வேளையில், கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள் இவ்வாறு கூறினார்.

"உண்மைக்கு சாட்சியாகத் திகழுங்கள்" என்று இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, கந்தமால் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வால் சாட்சியம் பகர்ந்துள்ளனர் என்று, இந்நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கேரள ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சூசைப் பாக்கியம்  அவர்கள் குறிப்பிட்டார்.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, இந்து அடிப்படைவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளில், 100க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், 6000த்திற்கும் அதிகமான வீடுகளும், 300க்கும் அதிகமான கிறிஸ்தவக் கோவில்களும், நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன என்று UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.