2017-06-07 16:45:00

ஜூன் 8, இவ்வியாழன் "அமைதிக்காக ஒரு நிமிடம்" முயற்சி


ஜூன்,07,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 7 இப்புதனன்று வழங்கிய புதன் பொது மறைக்கல்வியின் இறுதியில், ஜூன் 8ம் தேதி இவ்வியாழனன்று நடைபெறும் 'அமைதிக்காக ஒரு நிமிடம்' என்ற செப முயற்சியில், மக்கள் தன்னுடன் இணைந்து உலக அமைதிக்காகச் செபிக்குமாறு விண்ணப்பம் செய்தார்.

"அமைதிக்காக ஒரு நிமிடம்" என்ற முயற்சி, ஜூன் 8, இவ்வியாழன் பிற்பகல் 1 மணிக்கு கடைபிடிக்கப்படும் என்று ஆர்ஜன்டீனா ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

2014ம் ஆண்டு, ஜூன் 8ம் தேதி, இஸ்ரேல் அரசுத் தலைவர் இரமோன் பீரிஸ் அவர்களும், பாலஸ்தீனிய அரசுத்தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களும் வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து, உலக அமைதிக்காக செபித்தனர்.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆர்ஜன்டீனா ஆயர் பேரவை, ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 8ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு, அனைத்து மதத்தினரும் தங்கள் வழிகளில் ஒரு நிமிடம் செபிக்கும்படி "அமைதிக்காக ஒரு நிமிடம்" என்ற முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

இல்லங்களில், பள்ளிகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் இருக்கும் அனைவரும், அவரவர் நாடுகளின் நேரத்திற்கு ஏற்ப, பிற்பகல் ஒரு மணிக்கு, ஒரு நிமிடம் அமைதிக்காக செபிக்கும்படி ஆர்ஜன்டீனா ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆர்ஜன்டீனா ஆயர்களின் இந்த முயற்சிக்கு, அனைத்துலக கத்தோலிக்கப் பணி அமைப்பு, மற்றும் அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.