2017-06-07 16:02:00

பாசமுள்ளப் பார்வையில்….........., : பாசம்தான் இங்கு மருந்து


ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் கிளம்பும்போதுதான், சுவாமிநாதனுக்கு அந்த வலி எழும். எத்தனையோ நாட்களாக இந்த செருப்பை மாற்றவேண்டும் என்று திட்டமிட்டு வந்தாலும், கையில் பணமில்லாதுபோவதால் வரும் வலி அது.  என்ன செய்வது? குழந்தைகளின் படிப்பையும் பார்க்க வேண்டும். இது தவிர, வயதான காலத்தில், மனைவியின் மருத்துவச் செலவுகள் வேறு.  புது காலணி ஒன்று வாங்கும் திட்டம், சில மாதங்களாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வாரம் மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்ததால், எங்கெல்லாமோ புரட்டி 500 ரூபாயை மனைவியிடம் கொடுத்திருந்தார் சுவாமிநாதன். அன்று சாயுங்காலம் அலுவலகத்திலிருந்து வரும்போது, செருப்பு எப்போது அறுந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே வீடு திரும்பினார். 'தயாராக இருக்கிறாயா, மருத்துவரைப் பார்க்க கிளம்பலாமா' என வாசல்படியிலிருந்தே குரல் கொடுத்தார் சுவாமிநாதன். 'இன்றைக்கு வேண்டாங்க, அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்றார் மனைவி. 'ஏன், என்னாச்சு, இரண்டு நாட்களாக முதுகு வலிக்கிறது என்று அரற்றிக் கொண்டிருந்தாயே' என்று அவர் கேட்க, 'இப்போது சரியாகிவிட்டது. பையன் கடந்த ஒரு மாதமாக இரண்டு சட்டைகளையே, மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு கல்லூரி போய் வருகிறான். அவனுக்கு, புதிதாக ஒரு சட்டை எடுக்க பணம் கொடுத்தேன்' என, தன் முதுகைப் பிடித்துக்கொண்டே சொன்னார், அந்த தாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.