சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ பிறரன்புப் பணி

பசிச்சாவுகளை தடுக்க கானடா மதங்கள் அழைப்பு

கானடா மதத் தலைவர்கள் - REUTERS

08/06/2017 14:55

ஜூன்,08,2017. தென் சூடானின் பஞ்சம், மற்றும், ஏமன், வட‌கிழக்கு நைஜீரியா, சொமாலியா ஆகிய நாடுகளின் உணவுப் பற்றாக்குறை போன்றவற்றை அகற்றும் முயற்சியில் உதவ, கானடாவின் அனைத்து மதத்தலைவர்களுடன் இணைந்து, தேசிய அளவில் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது, கானடா திருஅவை.

இந்த நான்கு நாடுகளிலும் இடம்பெறுவது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இடம்பெறும் மிகப்பெரும் மனிதகுல நெருக்கடி என உரைத்த கானடா ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Douglas Crosby அவர்கள், அங்கீகாரம் பெற்ற பிறரன்பு அமைப்புக்கள் வழியாக, அனைத்து மக்களும், தங்களால் இயன்றதை இந்த நாடுகளின் மக்களுக்கு ஆற்ற வேண்டும் என விண்ணப்பித்தார்.

தென்சூடான், ஏமன், வட நைஜீரியா மற்றும் சொமாலியாவிற்கு உதவுவதற்கு என, மூன்று வழிகளை முன்வைத்துள்ளனர், கானாடாவின் கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் பாஹாய் மதத் தலைவர்கள்.

இம்மக்களுக்காக செபித்தல், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல், மற்றும், இந்த பஞ்ச நிலைகள் குறித்த விழிப்புணைர்வை மற்றவர்களில் எழுப்ப உதவுதல் என்ற மூன்று வழிமுறைகளை முன்வைத்துள்ள தலைவர்கள், இந்நாடுகளின் வறுமைக்குக் காரணமாக, அங்கு இடம்பெறும் வன்முறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த 4 நாடுகளில் 14 இலட்சம் குழந்தைகள் உட்பட,

2 கோடி பேர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

08/06/2017 14:55