2017-06-08 14:16:00

"அமைதிக்காக ஆராதனை" பீடத்தை அர்ச்சித்த திருத்தந்தை


ஜூன்,08,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கேற்ப, ஜூன் 8, இவ்வியாழனன்று, 'உலக அமைதிக்காக ஒரு நிமிடம்' என்ற முயற்சி, உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டதைப்போல, உரோம் நேரம் பிற்பகல் 1 மணிக்கு, கடைபிடிக்கப்பட்டது.

2014ம் ஆண்டு, ஜூன் 8ம் தேதி, இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பேரெஸ் அவர்களும், பாலஸ்தீனிய அரசுத்தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களும் வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து, உலக அமைதிக்காக செபித்தனர்.

வரலாற்றி சிறப்பு மிக்க இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 8ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு, அனைத்து மதத்தினரும் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே ஒரு நிமிடம் செபிக்கும்படி "அமைதிக்காக ஒரு நிமிடம்" என்ற முயற்சியை திருத்தந்தை அறிமுகம் செய்தார்.

மேலும், தென் கொரியாவில் உள்ள மரியன்னை திருத்தலம் ஒன்றில் வைக்கப்படவுள்ள ஒரு பீடத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் அர்ச்சித்தார்.

"உலக ஒற்றுமை, அமைதிக்காக ஆண்டவருக்கு ஆராதனை" என்ற பெயரில் போலந்து நாட்டில் துவக்கப்பட்ட ஒரு முயற்சியின் தொடர்ச்சியாக, இடைவிடாத ஆராதனைக்கென இந்த பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் 12 நாடுகளில் தொடர் ஆராதனை நடக்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்த இயக்கத்தினர், தென் கொரியாவின் Namyang நகரில் உள்ள செபமாலை அன்னை திருத்தலத்தில் இப்பீடத்தை நிறுவவுள்ளனர்.

இதற்கிடையே, "பணிவும், மேன்மை உள்ளமும், வலுவற்றோரின் புண்ணியங்கள் அல்ல, மாறாக, அவை, உறுதி மிக்கோரின் புண்ணியங்கள்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 8, இவ்வியாழனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.