2017-06-08 14:23:00

சுயநலத்தோடு எடுக்கப்படும் சுற்றுச்சூழல் முடிவுகள் ஆபத்தானவை


ஜூன்,08,2017. சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள மனதோடு, ஐ.நா. பொது அவை, உலகின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து முடிவுகள் எடுப்பதை, திருப்பீடம் ஆர்வமாக ஆதரிக்கும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.பொது  அவையில் உரையாற்றினார்.

நியூ யார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது அவையில் நடைபெறும் 'பெருங்கடல் கருத்தரங்கில்' திருப்பீடத்தின் பிரதிநிதியாக பங்கேற்றுவரும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இப்புதன் வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.

சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கு, மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும், சமுதாய வழிமுறைகளையும் மாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற தன் திருமடலில் விண்ணப்பித்துள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இயற்கை வளங்களைப் பயன்படுத்தும்போது, அடுத்தத் தலைமுறையினரைக் குறித்த அக்கறை ஏதுமின்றி, சுயநலத்தோடு செயல்படுவதை, தனி நபர் வாழ்விலும், சமுதாய, மற்றும் அனைத்துலக நிலைகளிலும் தவிர்க்கவேண்டும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

கடல்கள் பற்றிய நம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்போது, அறிவியலுடன், நன்னெறி வழிகளையும் புரிந்துகொள்வது அவசியம் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும், சமுதாய பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்பதை திருத்தந்தை தன் திருமடலில் கூறியுள்ளார் என்பதை நினைவுறுத்திய கர்தினால் டர்க்சன் அவர்கள், சுயநலத்தையும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆசையையும் அடிப்படையாகக் கொண்டு சுற்றுச்சூழல் குறித்த முடிவுகள் எடுப்பது, நம்மை ஆபத்திற்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.