2017-06-08 14:10:00

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை


ஜூன்,08,2017. இறுதிக்கட்ட புற்றுநோயால் பாதிப்படைந்து, இன்னும் சில மாதங்களே தான் வாழமுடியும் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட, இயன் டூட்ஹில் (Ian Toothill) அவர்கள், ஏவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார்.

ஜூன் 5, இத்திங்களன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 47 வயதான இயன் டூட்ஹில் அவர்கள், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் புற்றுநோயாளி தானாகத்தான் இருக்கும் என்று நம்புவதாகக் கூறுகிறார்.

மாக்மிலன் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நன்கொடை திரட்டும் முயற்சியில் இச்சாதனையை தொடங்கிய அவர், இதுவரை 40,600 டாலர் நன்கொடையை பெற்றுத்தந்துள்ளார்.

இயன் டூட்ஹில் அவர்களுக்கு குடல் புற்றுநோய் இருப்பதாக 2015 ஜூன் மாதம் கண்டறியப்பட்டது, நோயுடன் போராடி அவர் மீண்டு வந்தாலும், தற்காலிகமாக பின்னடைந்த புற்றுநோய் மீண்டும் அவரை தாக்கியதால், "இன்னும் சில மாதங்களே வாழமுடியும்" என்று அவரிடம் சொல்லப்பட்டது.

பிப்ரவரி மாதம் பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த இயன் டூட்ஹில் அவர்கள், "எதுவும் சாத்தியமே என்பதை நிரூபிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று சொன்னார்.

மே மாதம் 20ஆம் தேதி எவரெஸ்ட் மலையடிவாரத்தை அடைந்த இயன் டூட்ஹில் அவர்கள் வெளியிட்ட டிவிட்டர் செய்தி இது: "புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு..., நான் உங்களுக்காக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபடுகிறேன், புற்றுநோயுடன் போராடி தோற்றுப்போனவர்கள், உற்றார்-உறவினர்களை தவிக்கவிட்டு சென்றவர்களுக்காக நான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறேன்." 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.