2017-06-08 14:53:00

மெக்சிகோவில் நெருக்கடியானச் சூழல் உருவாகியுள்ளது - ஆயர்கள்


ஜூன்,08,2017. மெக்சிகோ சமுதாயத்தின் நம்பிக்கை, நினைவுகள், வழிமுறைகள் அனைத்தின் அடையாளங்களைக் குலைக்கும்வண்ணம் நாட்டில் நெருக்கடியானச் சூழல் உருவாகியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மனிதாபிமான நிலை, அரசியல், பொருளாதாரம், சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும் அவசரமான மாற்றங்கள் தேவை என்று, ஆயர்களின் அறிக்கை கூறியுள்ளது.

இந்நாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு மாற்றங்கள், மேலிருந்து, அரசு அதிகாரத்துடன் திணிக்கப்படக்கூடாது என்றும், இந்த மாற்றங்கள், மக்களோடு மேற்கொள்ளப்படும் உரையாடல் வழியே உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அநீதி, ஊழல், வன்முறை, குற்றம் புரிவோர் தண்டனை பெறாமலிருத்தல் என்ற நிலைகளில் மாற்றங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பதை, ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா ஆகிய அண்மை நாடுகளுடன், நீதி, சமத்துவம் இவற்றின் அடிப்படையில் அமைதியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் வறியோரின் வாழ்வை உயர்த்துவதற்கும், இயற்கை வளங்களைக் காப்பதற்கும் தேவையான முயற்சிகள் வெளிப்படவேண்டும் என்று மெக்சிகோ ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.