2017-06-08 14:46:00

வெனிசுவேலா மக்களுக்கு கொலம்பிய திருஅவை உதவி


ஜூன்,08,2017. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு, வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவும்விதமாக 'தெய்வீகப் பராமரிப்பு' என்ற பெயரில் இல்லம் ஒன்றைத் துவக்கியுள்ளது, கொலம்பிய மறைமாவட்டம் ஒன்று.

உணவு, மருந்து மற்றும் ஏனைய உதவிகள் தேடி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் வெனிசுவேலாவிலிருந்து வெளியேறி வரும் நிலையில், கொலம்பியாவின் Cucuta மறைமாவட்டம் இந்த இல்லத்தை துவக்கியுள்ளது.

La Parada என்ற பங்குதளத்தில் 1500 சதுர மீட்டர் இடத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த இல்லம், ஒவ்வொரு நாளும் 500 பேரை வரவேற்று, அவர்களுக்கு உணவு, தண்ணீர், போன்றவற்றை வழங்குவதுடன், அவர்களுக்கு ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணி உதவிகளையும் ஆற்றிவருகிறது.

பல்வேறு உதவி அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் துவக்கப்பட்டுள்ள இந்த இல்லம், பிறரன்பை வாழ்வாக்கும் முயற்சியின் ஓர் அடையாளம் என்று Cucuta மறைமாவட்ட ஆயர் Victor Manuel Ochoa Cadavid அவர்கள், பீதேஸ் (Fides) செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமூக, பொருளாதார, மற்றும், அரசியல் நெருக்கடிகளால் துன்புறும் இம்மக்களில் இயேசுவே துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும் என்று ஆயர் Cadavid அவர்கள் கூறினார்.

இதற்கிடையே, வெனேசுவேலா நாட்டில் தொடர்ந்துவரும் பதட்ட நிலைகளைக் குறித்து கலந்து பேச, அந்நாட்டு ஆயர் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் திருப்பீடத்தில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் :  Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.