2017-06-09 16:25:00

இந்தியாவில், பல்லாயிரம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவி


ஜூன்,09,2017. இந்தியாவில், கத்தோலிக்கர்களின் பராமரிப்பால் 15,000த்திற்கும் அதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் தற்போது மருத்துவ உதவிகள் பெற்று வருகின்றனர் என்று பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்தியாவில் பணியாற்றும் CHAI எனப்படும் கத்தோலிக்க மருத்துவக் கழகத்தின் 150க்கும் மேற்பட்ட மையங்கள் வழியே, பல்லாயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று, CHAI இயக்குனர், அருள்பணி மேத்யூ ஆபிரகாம் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

1943ம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட CHAI அமைப்பு, 1993ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பணியாற்றிவருகிறது என்றும், கடந்த 25 ஆண்டுகளாக, 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் இவ்வமைப்பின் வழியே மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் CHAI அமைப்பினர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர், குறிப்பாக, இளம் பெண்கள் மீது தனி கவனம் செலுத்தி வருவதாகவும், இந்நோயைத் தடுக்கும் விழிப்புணர்வு இளம் பெண்களுக்குத் தரப்படுவதாகவும் இவ்வமைப்பில் பணியாற்றும் மனிஷா குப்தே அவர்கள் கூறினார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.