2017-06-10 15:55:00

வெனிசுவேலாவிற்காக மெக்சிகோ விண்ணப்பம்


ஜூன்,10,2017. வெனிசுவேலா மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கெடுக்கிறோம் என்பதை, மெக்சிகோ நாட்டு மக்கள், தங்கள் செயல்கள் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளார், மெக்சிகோ ஆயர் பேரவைத் தலைவர். 

உணவு மற்றும் மருந்துக்களின் பற்றாக்குறையால், வெனிசுவேலா நாட்டின் மனித குல நெருக்கடி, எக்காலத்தையும் விட, தற்போது, மிக மோசமாக உள்ளதாக உரைத்தார் கர்தினால் Robles Ortega.

பணவீக்கமும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் அனைத்து மக்களையும், குறிப்பாக, குழந்தைகளை பெருமளவில் பாதித்துள்ளதாக உரைத்த ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஒர்த்தேகா அவர்கள், இந்த மாதத்தின் ஏதாவது ஒரு வாரக் கடைசியில், வெனிசுவேலா நாட்டு மக்களுக்கென, திரு அவையில் நிதி திரட்டல்கள் இடம்பெறும் என  அறிவித்தார்.

IMF எனும் அனைத்துலக நிதி நிறுவனத்தின் கூற்றுப்படி, தற்போது 700 விழுக்காடாக இருக்கும் வெனிசுவேலாவின் பணவீக்கம், 2018ம் ஆண்டில் 1200 விழுக்காடாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. வெனிசுவேலா நாட்டில் தற்போது, 82 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.