2017-06-12 16:06:00

வாரம் ஓர் அலசல் – உருவம் பார்த்து எள்ளல் வேண்டாமே


ஜூன்,12,2017. தமிழகச் சிறுமி ஒருவருக்கு, தற்போது வயது பன்னிரண்டு. அவளுக்கு ஐந்து வயதாகும்போது, ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்ட புதிதில் ஒருநாள் “Amma, I hate idly. But my hunger took it away” என்றாள். இவளின் அறிவை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவளின் தாய், இதுவரையில் தன் மகளின் மூன்று மிக முக்கியமான பள்ளிக்கூட அனுபவங்களை, விகடன் இதழில் இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

என் மகள், முதலில், பள்ளி ஆண்டு விழாக்களில் நடனமாட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள். ஆயினும், அவள் நிறம் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் கடைசி வரிசையில் ஆட வைக்கப்பட்டாள். அடுத்ததாக, அவள் உடல்வாகு காரணமாக எல்லா விளையாட்டுகளிலும் விரைவிலேயே வெளியேற்றப்பட்டு விடுவாள். மூன்றாவதாக, அவள் வகுப்பிலுள்ள வட இந்திய மாணவிகளின் உருவம் சார்ந்த கேலி. இந்த மாணவிகளில் சிலர், என் மகளை நிறம் சார்ந்து, உருவத்தைக் கேலி செய்தது மட்டுமில்லாமல் பட்டப்பெயர் வைத்தும் அழைத்திருக்கிறார்கள். மகள், பள்ளியை மாற்றச் சொல்லி வீட்டில் தினமும் அழ ஆரம்பித்தாள். எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. நெருக்கடிக்குப் பயந்து ஓர் இடத்தை விட்டு விலகுவது ஒரு தவறான பாடமாகிவிடும் என்று நம்பினோம். தோலின் வெள்ளை நிறத்தை மட்டுமே, தங்களின் ஒரே சொத்தாகக் கருதுபவர்கள்தாம், அடுத்தவர்களையும் அதை வைத்தே எடைபோடுகிறார்கள் என்று, என் மகளிடம் நானும், என் கணவரும் பேசி, அவளுக்குப் புரிய வைத்தோம். சக மனிதர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளை, அவர்களின் தனித்திறனைக் கவனிக்க இயலாமல் போவதும் அதனால்தான் என்பதை, என் மகளும் போகப் போகப் புரிந்துகொண்டு தெளிவடைந்தாள்.  என் மகள் வகுப்பில் எப்போதும் முதல் மாணவியாக இருந்தாலும், இந்த மூன்று காரணங்களும், அவளுக்கு அந்தந்த வயதுக்கு அதிகப்படியான நெருக்கடியாகவே இருந்தன. நான் கவனித்த வரையில், எல்லாப் பள்ளிகளின் ஆண்டு விழாக்களிலும், கறுப்பாக அல்லது மாநிறமாக இருக்கும் குழந்தைகள், குழு நடனத்தில் கடைசிக்குத் தள்ளப்படுவார்கள். சிவந்த நிறமுடைய குழந்தைகள், எவ்வளவு சுமாராக ஆடினாலும், அவர்கள்தான் முன்னின்று ஆடத் தகுதியானவர்கள் என்ற ஆசிரியர்களின் எண்ணத்தை, பிள்ளைகள் குழந்தையாக இருக்கும்போது புரியாவிட்டாலும், வளர வளர புரிந்துவிடுகின்றார்கள். இவ்வாறு, பல ஆசிரியர்கள், தங்களையும் அறியாமல், குழந்தைகள் மனதில் உருவம் சார்ந்த தாழ்வுமனப்பான்மையை விதைத்து விடுகிறார்கள். என் மகளும் இதிலிருந்து தப்பவில்லை. ஆனால், அவள் வேறொரு யுக்தியைக் கையாண்டாள். கீ-போர்டு வாசிக்கக் கற்றுக்கொண்டாள். எந்தப் பாட்டுக் கேட்டாலும், அதைப் பயிற்சி செய்வதுடன் தானாகவே புதிய இசைகளையும் வாசிப்பாள். பள்ளியின் இசை ஆசிரியர் அவள் ஆர்வத்தைக் கவனித்து, விழாக்களில், போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு தந்தார். தற்போது இறைவணக்கம் முதற்கொண்டு, தனியாக வாசிக்க ஆரம்பித்துவிட்டவளுக்கு குழு நடனம் ஆடுவதில் ஆர்வம் போய்விட்டது. விளையாட்டைப் பொறுத்தவரை அவள் கையாளும் முறைதான் மிகவும் இரசிக்கத்தக்கது. ஆர்வமிருந்தாலும் உடல் ஒத்துழைக்காததால், மகளால், எந்த விளையாட்டிலும் திறமையைக் காட்ட முடியவில்லை. ஆட்டத்திலிருந்து சீக்கிரமே வெளியேற்றப்பட்டு பெரும்பாலான நேரங்களில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எனினும், தற்போது வாலிபால், கூடைப்பந்து, கோ-கோ, இறகுப்பந்து... இப்படி எல்லா போட்டிகளுக்கும் இவள்தான் வர்ணனையாளர். இவள் வர்ணனை செய்ததைப் பார்த்து, விளையாட்டு ஆசிரியர் அதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்.

உருவம் கண்டு எள்ளாமை வேண்டும். தங்களின் நிறம், உடல்கட்டமைப்பு போன்றவற்றால் பலர், குறிப்பாக, பள்ளிச் சிறார், கேலிக் கிண்டலுக்கு உள்ளாகி, தாழ்வு மனப்பான்மையில், நல்வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். விமர்சனங்கள் எப்போதும் எழுந்து கொண்டேதான் இருக்கும். ஆயினும், மிகச் சிலரே, விமர்சனங்கள் எழமுடியாத  இடத்துக்குத் தங்களை மேன்மேலும் உயர்த்திக்கொள்கிறார்கள். ஒரு தையற்காரர் தனது கடையில் தைத்துக் கொண்டிருந்தார். அவரது மகன், அவர் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார் அதை ஓர் அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக் கோலைக் அவர் அமரும் இடம் அருகே வைத்துவிட்டார். பிறகு ஊசியால் துணியைத் தைக்கத் தொடங்கினார். துணியைத் தைத்து முடிந்ததும், அந்தச் சிறிய ஊசியை எடுத்து, தனது தலையிலிருந்த தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது மகன் அவரிடம், கத்திரிக்கோல் விலை உயர்ந்தது, அதை உங்கள் காலடியில் போடுகிறீர்கள், ஊசி சிறியது, மற்றும் மிகவும் மலிவானது, ஆனால், அதை உங்கள் தலைத் தொப்பியில் பாதுகாக்கிறீர்களே, அது ஏன்? என்று கேட்டான். அதற்கு தந்தை, நீ சொல்வது உணமைதான். கத்திரக்கோல் அழகாகவும், மதிப்பு உள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பது, ஆனால் ஊசி சிறியதாகவும் மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது என்றார்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு, அச்சாணி அன்னார் உடைத்து என்பது குறள். உருளுகின்ற பெரிய தேருக்கு, அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அதனால் ஒருவரது உருவின் சிறுமையைக் கண்டு நாம் இகழக் கூடாது என்றார் வள்ளுவர்.

ஒருசமயம், வயது முதிர்ந்த அம்மா ஒருவர், தன்னுடைய காசோலையை, வங்கியில் பணப்பரிமாற்றம் செய்பவரிடம் கொடுத்து,"எனக்கு ஐந்நூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார். உடனே அந்த வங்கி அலுவலகர், அந்த முதியவரிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்குக்கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றார். உடனே அந்த, முதியவர்,"ஏன்?" என்று கேட்டார். உடனே அந்த அலுவலகர் சற்று எரிச்சலுடன், அந்த முதியவரிம்,"இதுதான் வங்கிச் சட்டம். வேற எந்த விடயமும் இல்லைன்னா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்குப் பின்னால் நிறைய பேர் காத்திருக்காங்க" என்று சற்றே கடுமையுடன் கூறினார். அந்த முதியவர் அமைதியாக, தனது காசோலையை மீண்டும் அவரிடம் கொடுத்து,"தயவு செய்து என் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் எனக்குத் திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த அலுவலகர், அந்த முதியவர் கணக்கிலுள்ள பண நிலுவையைப் பார்த்த பொழுது அதிர்ச்சியானார். அவர் தனது தலையை ஆட்டிக்கொண்டு, அந்த முதியவரிம், "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிகப் பணிவோடு கேட்டார். உடனே அந்த முதியவர்,  "இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது கணக்கிலிருந்து எடுக்க இயலும்?" என்று கேட்டார். உடனே அந்த பெண்,"மூன்று இலட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றார். உடனே அந்த முதியவர், அந்த அலுவலகரிடம் மூன்று இலட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினார். அந்த அலுவலகரும் மூன்று இலட்சம் ரூபாயை வேகமாக, மிகப் பணிவுடன் கொடுத்தார். அந்த முதியவர், இப்பொழுது ஐந்நூறு ரூபாயை தனது கைப்பையில் வைத்துவிட்டு, மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவரது கணக்கில் சேர்க்கச் சொன்னார். அந்த அலுவலகர், இப்பொழுது வாயடைத்து நின்றார்.

ஒருமுறை IAS அதிகாரி உ.சகாயம் அவர்கள் ஒரு மேடையில் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

எனது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவருக்கு வயது அறுபது இருக்கும். அவர், தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். அந்த வயதிலும் மனைவியோடு மிக அன்புடன் வாழ்ந்து வந்தவர். காலையில் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு, துணிகளைத் துவைத்து பொறுப்பாக வரக்கூடியவர். அன்று நேரம் கடந்தும் அவர் வரவில்லை. தேடிச் சென்றபோது, அவர் சாலையோரம் விழுந்து கிடந்தார். பசியினாலும், இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்ததாலும் சாலையோரம் மயங்கி விழுந்திருந்தார். ஆனால் அவரை யாரும் கவனிக்கவில்லை. அப்படி கவனித்திருந்தாலும், காலையிலேயே குடித்துவிட்டு கிடப்பதைப் பார் எனச் சொல்லி நாம் கடந்து செல்வோமே தவிர, உண்மை நிலையை அறியக்கூட முயலப்போவதில்லை. அப்படி கைவிடப்பட்ட அவர், அதே இடத்தில் இறந்தும் போனார். அதேபோல், ஒருமுறை, எனது தந்தை தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இதே காரணத்தால் மயங்கி விழுந்தார். மதியம் விழுந்த அவரை, அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில், யாரும் சீண்டவில்லை. ஒரு குடிகாரன் குடித்துவிட்டு கிடக்கிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும். மாலையில் அவர், தானாக எழுந்து தன்னைத்தானே சுதாரித்து வீடு வந்து சேர்ந்தார். மேற்கண்ட இருவரும் தங்கள் வாழ்க்கையில் மதுவினைத் தொடாதவர்கள். ஒருநாளும் குடித்ததில்லை.

ஓர் அழகான இதயம், ஆயிரம் அழகான முகங்களைவிட சிறந்தது. எனவே அழகான முகங்களைவிட, அழகான இதயம் கொண்ட மனிதரைத் தேர்ந்தெடுப்போம். எல்லா மனிதரும், இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்ற உணர்வில், உருவத்தை, உடையை, படிப்பை, பணத்தை வைத்து, யாரையும் மதிப்பிடாமல், மரியாதையுடன் நடந்துகொள்வோம். குடித்தவரோ, குடிக்காதவரோ, சிறியவரோ, வயது முதிர்ந்தவரோ, தெரிந்தவரோ, தெரியாதவரோ, யாராக இருந்தாலும், அனைவரின் மனிதத்தை மதித்து நடப்போம். இறுதியாக தாழ்வுமனப்பான்மையில் உள்ளவர்களுக்கு ஒரு சத்துமருந்து. விழுந்தால் அழாதே, எழுந்திரு. தோற்றால் புலம்பாதே, போராடு. கிண்டலடித்தால் கலங்காதே, மன்னித்துவிடு. தள்ளினால் தளராதே, துள்ளியெழு. நஷ்டப்பட்டால் நடுங்காதே, நிதானமாக யோசி. ஏமாந்துவிட்டால் ஏங்காதே, எதிர்த்து நில். நோய் வந்தால் நொந்து போகாதே, நம்பிக்கை வை. உதாசீனப்படுத்தினால் உதறாதே, உயர்ந்து காட்டு. உன்னை உயர்த்த நீதான், நம்பு. உன்னை மாற்ற நீதான் முடிவெடு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.