2017-06-12 17:23:00

வேலைவாய்ப்பின்மை பிரச்சனை குறித்து, பேராயர் யுர்கோவிச்


ஜூன்,12,2017. இன்றைய உலகில் பொருளாதார வளர்ச்சி பெருகியிருந்தாலும், வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனைக்கு, சரியான தீர்வைக் காணமுடியவில்லை என்பதை, கடந்த பத்தாண்டுகளாக நாம் உணர்ந்து வருகிறோம் என்று, ஐ.நா. கூட்டம் ஒன்றில் உரையாற்றினார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச் (Ivan Jurkovic).

ஜெனீவாவில் செயலாற்றும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில், நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் யுர்கோவிச் அவர்கள், பணியை மையப்படுத்தி நிகழ்ந்த உலக கருத்தரங்கின் 106வது அமர்வில் உரையாற்றியபோது, வேலைவாய்ப்புகளற்ற வளர்ச்சி என்பது, சமுதாயத்தில் பதட்ட நிலைகளை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

ஒவ்வொரு கண்டத்திலும், வறியோர் செல்வந்தரிடையே பொருளாதார இடைவெளி அதிகரித்து வருவதையும், இதனால், வேலைவாய்ப்பு, மற்றும் சமூக பாகுபாடுகள் ஆழமாகி வருவதையும், பேராயர் யுர்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

உலகில், எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக வளர்ச்சிவிகிதம் இடம்பெற்று வரும் சூழலில், வேலைவாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கை, 20 கோடியை எட்டும் நிலை உள்ளது என்பதை பேராயர் யுர்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில் 7 கோடியே, 10 இலட்சம் இளையோர், வேலைவாய்ப்பின்றி இருப்பதையும், 15 கோடியே 60 இலட்சம் இளையோர், தகுதிக்குக் குறைந்த வேலை செய்து, வறுமையில் வாடுவதையும் குறித்து, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் யுர்கோவிச் அவர்கள், கவலை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.