2017-06-13 16:33:00

பாகிஸ்தானின் தெய்வ நிந்தனைச் சட்டம் குறித்து கவலை


ஜூன்,13,2017. முகநூலில் இறைவாக்கினர் முகமதுவை அவதூறாகச் சித்தரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மனிதரை விடுவிக்க வேண்டும் என, பாகிஸ்தான் அரசை விண்ணப்பித்துள்ளது, அம்னஸ்டி இன்டர்நேசஷனல் அமைப்பின் பாகிஸ்தான் கிளை.

இறைவாக்கினர் முகமதுவை அவதூறாகச் சித்தரித்தார் என்பதை, பிரிவினையைத் தூண்டும் செயலாகக் கருதி, பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்காடு மன்றத்தில், மரணதண்டனை வழங்கியுள்ளது, பாகிஸ்தான் அரசு.

வலைத்தளக் குற்றம் ஒன்றிற்காக பாகிஸ்தான் நாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். வலைத்தளத்தில் ஆற்றிய ஒரு குற்றத்திற்கு மரணதண்டனை விதிப்பது, அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரானதாகும் என்ற பாகிஸ்தான் அம்னெஸ்டி அமைப்பின் ஆய்வாளர் Nadia Rahman அவர்கள், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயலும் இத்தீர்ப்பில் கையாளப்பட்டுள்ள சட்டங்கள், தெளிவற்று உள்ளன என உரைத்தார்.

அண்மையில் மக்கள் கும்பல் ஒன்றால் நடத்தப்பட்ட வன்முறைகளில் மூன்று பேர் உயிரிழந்தது மற்றும் பெருமளவில் மக்கள் காயமடைந்தது குறித்து விசாரணைச் செய்ய தவறியுள்ள அரசு, தவறான சட்டங்கள் வழியாக, விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறது என்றார் ரஹ்மான்.

மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தான் நாட்டில், பொய்க் குற்றச்சாட்டின் பேரில் தெய்வ நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக, ஏற்கனவே கடந்த டிசம்பரில், தன் அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது, அம்னஸ்டி அமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.