2017-06-14 15:50:00

மனநலப் பிரச்சனைகளுக்கு ஆன்மீக வழிகளிலும் தீர்வு காண...


ஜூன்,14,2017. மனநலப் பிரச்சனைகளோடு வாழும் மக்களுக்கு, மருத்துவ உதவிகளோடு, ஆன்மீக உதவிகளும் ஆற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அவை, மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில், நிரந்தப் பார்வையாளராகப் பங்கேற்றுவரும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவை கூட்டத்தில் இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

ஒருவரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, அவரின் ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்டுவது அவசியம் எனவும் கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மனநலப் பிரச்சனைகள், உலகின் பல நாடுகளில், பரவலாகப் புறக்கணிக்கப்படுவது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

மனநலப் பிரச்சனைகளை மருந்துகளால் மட்டும் குணமாக்க முடியும் என்பது, மிகக் குறுகிய கண்ணோட்டம் என்று ஐ.நா. அவை கூறியுள்ளதை திருப்பீடம் வரவேற்கிறது என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இப்பிரச்சனையில் சிக்கியுள்ளோரை மனிதர்களாக மதிப்பது, நாம் வழங்கக்கூடிய அடிப்படை மருத்துவம் என்று எடுத்துரைத்தார்.

'தூக்கியெறியும் கலாச்சாரத்தை'ப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளிலும் மடல்களிலும் கூறியுள்ளதை, தன் உரையில் குறிப்பிட்ட, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்துள்ள உலகம், வாழ்வையும் தூக்கி ஏறியத் தயங்குவதில்லை என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.