2017-06-14 16:24:00

மியான்மாரைக் கட்டியெழுப்பும் பணியில் கத்தோலிக்கர் ஆர்வம்


ஜூன்,14,2017. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்விளைவுகளை அனுபவித்துவரும் மியான்மார் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிப்பதற்கு, அந்நாட்டு கத்தோலிக்கர் உறுதி எடுத்துள்ளனர்.

தலைநகர் யாங்கூனில், கடந்த வாரத்தில் நடைபெற்ற, மூன்று நாள் பயிற்சிப் பாசறையில் கலந்துகொண்ட ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவிகள், மற்றும், பொதுநிலையினர் அனைவரும் இணைந்து, ஐந்தாண்டு திட்டம் ஒன்றையும் வகுத்தனர்.

2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரையுள்ள ஆண்டுகளில், மியான்மார் தலத்திருஅவையின் தொலைநோக்குப் பார்வை, மறைப்பணி மற்றும் ஏனைய பணிகள் குறித்து கவனம் செலுத்த, இப்பாசறையில் தீர்மானிக்கப்பட்டது.

கத்தோலிக்கத் திருஅவை, மியான்மார் நாட்டின் ஓர் அங்கம் என்ற முறையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில், முழுவீச்சுடன் ஈடுபடுவதற்கு, இப்பாசறையில் கலந்துகொண்டோர் உறுதி எடுத்தனர் என, அந்நாட்டு ஆயர் பேரவையின் செயலர் அருள்பணி Maurice Nyunt Wai அவர்கள் தெரிவித்தார்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.