சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தை: ஊழல், மனித சமுதாயத்தைக் கொல்லும் புற்றுநோய்

'துருப்பிடித்தல்' அல்லது, 'அரித்தல்' என்ற பொருள்படும் 'Corrosion' என்ற தலைப்பில் வெளியான நூல் - RV

15/06/2017 15:35

ஜூன்,15,2017. கிழிதல், உடைதல், சிதைதல் என்ற சொற்களின் ஒட்டுமொத்த வடிவமாக அமைந்திருப்பது, 'ஊழல்' என்ற சொல் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுடன், வித்தோரியோ அல்பெர்த்தி என்பவர் மேற்கொண்ட நேர்காணலின் தொகுப்பு, ஜூன் 15, இவ்வியாழனன்று, ஒரு நூலாக வெளியிடப்பட்டது.

'துருப்பிடித்தல்' அல்லது, 'அரித்தல்' என்ற பொருள்படும் 'Corrosion' என்ற தலைப்பில் வெளியான இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழல் என்பது, மனித சமுதாயத்தைக் கொல்லும் புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ளார்.

இறைவனோடு, அயலவரோடு, படைப்போடு என்ற மூன்று நிலைகளில் மனிதர்கள் கொள்ளும் உறவுகளைக் குறித்துப் பேசும் திருத்தந்தை, ஊழல் என்ற நோயினால், இம்மூன்று நிலைகளிலும் எதிர்மறையான தாக்கங்கள் உருவாகின்றன என்று கூறியுள்ளார்.

உயிரற்ற உடல் அழுகிப்போவதுபோல், ஊழலில் ஊறிப்போகும் மனிதர்கள், உயிருள்ளபோதே அழுகிய உடலைப்போல மாறுகின்றனர் என்று, தன் அணிந்துரையில் திருத்தந்தை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமுதாயத்தின் பல்வேறு நிறுவனங்களில் ஊழல் காணப்படுவதுபோல், திருஅவையிலும் மறைமுகமான வழிகளில் இது நுழைந்துவிடுகிறது என்று கூறும் திருத்தந்தை, 'உலகோடு இணைந்துபோகும் ஆன்மீகம்', திருஅவை சந்திக்கும் ஆபத்தான ஊழல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், "ஒவ்வொருவரின் வாழ்வும், அடுத்தவரின் வாழ்வோடு பிணைக்கப்பட்டுள்ளது: வாழ்க்கை, வெறுமனே கடந்து போவதற்கல்ல, மாறாக, மற்றவரோடு தொடர்பு கொள்வதற்கே" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

15/06/2017 15:35