2017-06-16 15:26:00

இறைவனின் வல்லமை நம்மை பாவத்திலிருந்து மீட்கின்றது


ஜூன்,16,2017. இறைவனால் மீட்கப்பட வேண்டுமானால், மண்பாண்டங்களைப் போன்ற வலுவற்றவர்கள், பலவீனர்கள், மற்றும், பாவிகள் என்பதை, நாம் ஏற்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார். 

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமடலில், கிறிஸ்துவின் மறையுண்மை குறித்துப் பேசும் பவுலடிகளார், நம் வலுவின்மையில், கிறிஸ்து என்ற செல்வத்தைக் கொண்டிருக்கிறோம், நாம் மண்ணால் உருவான பாத்திரங்கள் என்பதால், நாம் வலுவற்றவர்கள் என்று சொல்லும் பகுதியை (2கொரி.4,7-15) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவனின் வல்லமை, பலவீனம் மற்றும், பாவங்களிலிருந்து, நம்மை மீட்கின்றது எனக் கூறினார்.

நாம் எல்லாருமே பலவீனர்கள், நாம் அனைவருமே குணமாக்கப்பட வேண்டியவர்கள், ஆயினும், நம் பலவீனத்தை ஏற்பது, வாழ்வில் மிகக் கடினமான ஒன்று, நம் பலவீனத்தை மூடிமறைக்க, சிலவேளைகளில் மாறுவேடம் போடுகிறோம், இந்தப் பொய் வேடங்கள், எப்போதுமே வெட்கத்துக்குரியன என்று கூறினார் திருத்தந்தை.

ஏனையோரிடம் பொய்வேடம் போடும் நாம், சிலவற்றுக்காக, நமக்கு நாமே அதே வேடத்தைப் போட்டுக்கொள்கிறோம் என்றும், நம் பலவீனங்களையும், பாவங்களையும் மறைப்பதற்குச் சோதனைகளுக்கும் உள்ளாகின்றோம் என்றும் கூறியத் திருத்தந்தை, நாம் நம் பலவீனங்களை ஏற்கும்போது, இறைவன் தம் மீட்பைக் கொணர்கிறார் என்றும் தெரிவித்தார்.

ஒப்புரவு அருளடையாளம் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, சற்று உறுதியாய்த் தெரிவதற்காக, மண்பாண்டத்திற்கு வெள்ளையடிப்பது போன்று, ஒப்புரவு அருளடையாளத்தில், நாம் பாவங்களை அறிக்கையிடுகின்றோம் எனக் கூறினார்.

நாம் மண்ணால் செய்யப்பட்டவர்கள் என்பதை ஏற்கும்போது மட்டுமே, இறைவனின் அளவுகடந்த வல்லமை நம்மில் வரும் மற்றும், மீட்கப்பட்டோம் என்ற மகிழ்வைத் தரும், இவ்வாறு, ஆண்டவரின் செல்வத்தை நாம் பெற்றுக்கொள்வோம் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.