2017-06-16 15:46:00

வெனிசுவேலாவில் புதிய தேர்தல்களுக்கு திருப்பீடம் ஆதரவு


ஜூன்,16,2017. வெனிசுவேலா நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்படவும், துன்புறும் மக்கள் அதிலிருந்து விடுதலை பெறவும், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் அவசியம் என, திருப்பீட உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆறு இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, இவ்வாரத்தில் எழுதியுள்ள கடிதத்தில், இந்தக் கலந்துரையாடல்களின் விளைவாக நடைபெறும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்குத் திருப்பீடம் ஆதரவளிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி,  வெனிசுவேலா நாட்டின் தற்போதைய கடும் துன்பங்களுக்குத் தீர்வு காண்பதற்கு, திருப்பீடம் முயற்சித்து வருகின்றது என்றும், கர்தினாலின் கடிதம் கூறுகின்றது.

வெனிசுவேலா அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் கலந்துரையாடல்களில், அரசியலமைப்பின்படி திட்டமிடப்படும் நியாயமான தேர்தலை நடத்துவது உட்பட, மிகத் தெளிவான திட்டங்கள் வகுக்கப்படுவதை திருப்பீடம் வரவேற்கின்றது எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

இம்மாதம் 8ம் தேதி வெனிசுவேலா ஆயர்கள், திருத்தந்தையைச் சந்தித்ததைத்  தொடர்ந்து, கர்தினால் பரோலின் அவர்கள், இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.