2017-06-17 14:32:00

அவிஞ்ஞோனில் திருத்தந்தையர் தங்கியிருந்ததன் 700ம் ஆண்டு


ஜூன்,17,2017. பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞோனில் (Avignon) திருத்தந்தையர் தங்கியிருந்ததன் 700ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பிரதிநிதியாக, கர்தினால் Paul Poupard அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

இம்மாதம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை, அவிஞ்ஞோனில் நடைபெறும் நிகழ்வுகளில், திருப்பீட கலாச்சார அவையின் முன்னாள் தலைவரான, கர்தினால் Paul Poupard அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, திருத்தந்தையின் சார்பில்  கலந்துகொள்ளும்.

அவிஞ்ஞோனில் 1305ம் ஆண்டு முதல், ஏழு திருத்தந்தையரும், இரண்டு எதிர்த் திருத்தந்தையரும் தங்கியிருந்தனர். திருஅவையில் பெரும் மேற்கத்திய பிரிவினை ஏற்பட்ட 39 ஆண்டு காலத்தில்(1378-1417), ஒரு திருத்தந்தை உரோமையிலும், மற்றொருவர் அவிஞ்ஞோனிலும் இருந்து ஆட்சி செய்தனர். புனித சியன்னா கத்ரீன், திருத்தந்தையரை உரோமைக்கு அழைத்து வந்தார். திருத்தந்தை 11ம் கிரகரி, 1376ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அவிஞ்ஞோனைக் கைவிட்டார். அவர், 1377ம் ஆண்டு சனவரி 17ம் நாளன்று, உரோமைக்கு வந்தார். இத்தோடு, திருத்தந்தையர் அவிஞ்ஞோனில் தங்கியிருந்தது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. ஆயினும், அதற்கு அடுத்த ஆண்டில் திருத்தந்தை 11ம் கிரகரி இறந்தார். இதற்குப் பின் பிரச்சனைகள் மீண்டும் தொடங்கின. எதிர்த் திருத்தந்தையர் அவிஞ்ஞோனில் இருந்தனர். ஆயினும், 1417ம் ஆண்டில், கான்ஸ்டன்ஸ் சங்கத்தில் மேற்கத்திய பிரிவினைப் பிரச்சனைக்கு முடிவுக்கு வந்தது.

மேலும், இங்கிலாந்து நாட்டின் வட கென்சிஸ்டன் பகுதியில், அடுக்குமாடி கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர், மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார்.

இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்தவும், இதில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி உதவிகள் ஆற்றவும், துணிச்சலுடன், அயராது பணியாற்றிய அனைவருக்கும் தன் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

ஜூன் 14, இப்புதன் நள்ளிரவில், Grenfell Tower என்றழைக்கப்படும் 24 மாடிகள் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.