2017-06-19 15:14:00

இயேசுவே வானிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு


ஜூன்,19,2017. இயேசுவே விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, தந்தையாம் இறைவன், இயேசுவை, நித்திய வாழ்வின் உணவாக, இவ்வுலகுக்கு அனுப்பினார் எனவும், இதனாலே, இயேசு தம் உடலை நமக்குத் தந்து, தம் குருதியைச் சிந்தி,  சிலுவையில் தம்மையே தியாகம் செய்தார் எனவும் கூறினார்.

திருப்பயணிகளாகிய நம்மை விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், பிறரன்பிலும் பேணி வளர்ப்பதற்காக, இயேசு, எம்மாவு சீடர்களிடம் ஆற்றியதுபோன்று, திருநற்கருணையில், நம்முடன் இருக்கின்றார் என்றும் திருத்தந்தை கூறினார்.

சோதனைகளில் நம்மைத் தேற்றவும், நீதி மற்றும் அமைதிக்கு நம்மை அர்ப்பணித்து செயலாற்றுகையில், நமக்கு ஆதரவாகவும், இயேசு திருநற்கருணையில், நம்முடன் இருக்கின்றார் என்றும், மூவேளை செப உரையில் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறு இரவில், உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் தான் நிறைவேற்றவிருந்த பெருவிழாத் திருப்பலி, மற்றும், அதைத் தொடர்ந்து, புனித மேரி மேஜர் பசிலிக்கா வரை நடைபெறவிருந்த திருநற்கருணை பவனி பற்றியும், மூவேளை செப உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.