2017-06-19 15:42:00

திருத்தந்தையின் இந்தியப் பயணம் 2017ல் நடைபெறுவது சந்தேகம்


ஜூன்,19,2017. இவ்வாண்டில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், பங்களாதேஷ் மற்றும், இந்தியாவுக்கான திருத்தூதுப் பயணம், அடுத்த ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்படக் கூடும் என, இந்தியாவின் முக்கிய கத்தோலிக்கத் தலைவர் ஒருவர், ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

National Catholic Reporter (NCR) என்ற ஊடகம், மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களிடம், ஜூன் 15, கடந்த வியாழனன்று பேட்டி கண்ட பின், இவ்வாறு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.    

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 2017ம் ஆண்டின் இத்திருத்தூதுப் பயணம் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி அரசுடன் இடம்பெற்றுவரும் உரையாடல்கள், எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் எடுக்கின்றது என, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியதாக, அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.   

பங்களாதேஷ் மற்றும், இந்தியாவுக்கு, 2017ம் ஆண்டில் திருத்தந்தையின்  திருத்தூதுப் பயணம் இடம்பெறும் என்பதில் தான் நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நாம் ஏற்கனவே ஜூன் மாதத்தில் இருக்கிறோம், இந்த ஆண்டில் வைத்துக்கொள்ளலாம் என, அரசு திடீரெனக் கூறினாலும், இது மேய்ப்புப்பணி சார்ந்த பயணமாக இருப்பதால், மறைமாவட்ட அளவில் தயாரிப்புகள் நடைபெற, காலம் போதாது என்றார்.

1999ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, ஆயர்கள் ஓராண்டிற்கு முன்னரே தயாரிப்புக்களைத் தொடங்கினர் எனவும், கர்தினால் கூறியதாக, அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை (CCBI) மற்றும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (FABC) தலைவராவார். 

ஆதாரம் : NCR /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.