2017-06-19 15:50:00

புலம்பெயர்வு,சந்திப்புக்கும்,வளர்ச்சிக்கும் தகுந்த வாய்ப்பு


ஜூன்,19,2017. மக்களின் புலம்பெயர்வு, மனித சமுதாயத்தால் நன்முறையில் கையாளப்பட்டால், மக்கள் ஒவ்வொருவரின் சந்திப்புக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த வாய்ப்பாக அமையும் என, இத்திங்களன்று, ஐ.நா.வில் உரையாற்றினார், திருப்பீட அதிகாரி ஒருவர்.

மக்களின் புலம்பெயர்வு குறித்த பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும், புலம்பெயர்வை நிர்வகித்தல் என்ற தலைப்பில், ஜெனீவாவில், இத்திங்களன்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்வோர் பிரிவின் நேரடிப் பொதுச் செயலர், இயேசு சபை அருள்பணி Michael Czerny அவர்கள், இவ்வாறு கூறினார்.

மனித வர்த்தகர்களும், கடத்தல்காரர்களும் புலம்பெயரும் மக்களின் வலுவற்ற நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அருள்பணி Czerny அவர்கள், துன்புறும் மக்களைப் பயன்படுத்தும் இக்குற்றக் கும்பல்கள், மனித மாண்பிற்கு ஊறு விளைவிக்கின்றன என்று கூறினார்.

புலம்பெயர்வோர், புகலிடம் தேடுவோர், மற்றும் குடியேற்றதாரர்க்கு, சட்டமுறையான பாதைகள் அமைக்கப்பட்டால் மட்டுமே, அவர்களுக்குப் பாதுகாப்பான குடியேற்றம் கிடைக்கும் என்ற திருப்பீடத்தின் ஆவலையும், ஐ.நா.வில் தெரிவித்தார், அருள்பணி Czerny.   

உலக அளவில் புகலிடம் தேடுவோர் அல்லது, நாட்டிற்குள்ளே புலம்பெயர்வோரின் எண்ணிக்கை, 6 கோடியே 56 இலட்சத்தை எட்டியுள்ளது என, ஐ.நா. புலம்பெயர்வோர் நிறுவனம் கூறியுள்ளது. 2016ம் ஆண்டின் இறுதியில் இருந்த இம்மக்களின் எண்ணிக்கை, 2015ம் ஆண்டைவிட, மூன்று இலட்சம் அதிகம் எனவும், அந்நிறுவனத்தின் உயர் இயக்குனர் Filippo Grandi அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.