2017-06-20 15:42:00

2018ல் சிலே, பெரு நாடுகளுக்கு திருத்தந்தை திருத்தூதுப்பயணம்


ஜூன்,20,2017. “புலம்பெயர்ந்த மக்களை நேரிடையாகச் சந்திப்பது, பயங்களையும், திரித்துக் கூறப்படும் கருத்தியல்களையும் அகற்றும், மற்றும், மனித சமுதாயத்தில் வளர்வதற்கு ஒரு காரணியாக அமையும்”என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், உலக புலம்பெயர்ந்தவர் நாளான, ஜூன் 20, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், 2018ம் ஆண்டு சனவரியில், சிலே, பெரு ஆகிய இரு தென் அமெரிக்க  நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு சனவரி 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சிலே நாட்டின் Santiago, Temuco, Iquique ஆகிய நகரங்களிலும், 18ம் தேதி முதல், 21ம் தேதி வரை பெரு நாட்டின் Lima, Puerto Maldonado, Trujillo ஆகிய நகரங்களிலும், திருத்தந்தை, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என,  திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விரு நாடுகளின் தலைவர்கள், மற்றும், ஆயர்களின் அழைப்பின்பேரில், இத்திருத்தூதுப் பயணம் இடம்பெறுகின்றது எனவும், இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகள் குறித்த விவரங்கள், பின்னர் வெளியிடப்படும் எனவும், பர்க் அவர்கள் கூறினார்.

முதல் இலத்தீன் அமெரிக்க திருத்தந்தையாகிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டில் பிரேசில், 2015ம் ஆண்டில் பொலிவியா, ஈக்குவதோர், பரகுவாய், 2016ம் ஆண்டில் கியூபா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1985 மற்றும், 1988ம் ஆண்டுகளில், பெரு நாட்டிலும், 1987ம் ஆண்டில், சிலே நாட்டிலும், திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.