2017-06-20 15:31:00

அருள்பணி மிலானி ஏழைகளின் மாண்பைப் பாதுகாத்து, ஊக்குவித்தவர்


ஜூன்,20,2017. இத்தாலியின் பர்பியானா (Barbiana) நகரத்திற்கு இச்செவ்வாயன்று சென்று, அங்குள்ள அருள்பணியாளர் லொரென்சோ மிலானி அவர்களின் கல்லறையில் செபித்து, அந்நகர விசுவாசிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, அருள்பணி மிலானி, தன்னையே கிறிஸ்துவுக்குக் கொடையாக வழங்குவதன் வழியாக, தேவையில் இருக்கின்ற சகோதரரைச் சந்தித்து, அவர்களின் மாண்பைப் பாதுகாத்து, ஊக்குவித்தவர் என்று கூறினார்.

அருள்பணி மிலானி அவர்களின் மாணவர்கள், இன்னும், பர்பியானா பள்ளியிலுள்ள ஏனைய மாணவர்களை இந்நாளில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அருள்பணி மிலானி அவர்கள், தனது மறைப்பணியை எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கு நீங்களே சாட்சிகள் என்றும், கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி மிலானி அவர்கள் இறந்ததன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, இப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, பர்பியானாவில் புதிய தலைமுறைகளை வளர்க்கும், அனைத்து ஆசிரியர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

உண்மை மற்றும், ஒளிவுமறைவற்ற பண்போடு திருஅவையை அன்புகூர, இந்த அருள்பணியாளர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்றும், தானும் இந்த நல்ல அருள்பணியாளரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடப்பதற்கு, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டு, இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிளாரன்ஸ் உயர்மறைமாவட்டத்திலுள்ள பர்பியானாவில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள்பணி மிலானி, நிர்வாகத்திற்கு எதிராக இருந்தார் எனக் குறைகூறப்பட்டாலும், இவர் தனது வாழ்நாள் முழுவதும், திருஅவைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘அருள்பணி மிலானி உலகுக்குக் காட்டிய திருஅவை, தாய்மை மற்றும், பிறர்நிலையை எண்ணிப் பார்க்கின்ற முகத்தைக் கொண்டுள்ளது. இது, அனைவரும் கடவுளைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்களை வழங்குகிறது’ என்ற சொற்களை, அருள்பணி மிலானி அவர்களின் கல்லறையைத் தரிசித்த பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.