2017-06-20 15:12:00

இத்தாலியின் பங்குத்தந்தைக்கு திருத்தந்தை மரியாதை


ஜூன்,20,2017. ஆண்டவருக்கும், இறைமக்களுக்கும் ஆற்றிய பணியில், தங்களின் தடங்களை விட்டுச்சென்றுள்ள இரு பங்குப் பணியாளர்களின் பாதச்சுவடுகளில், திருப்பயணியாக வந்துள்ளேன் என, இச்செவ்வாயன்று அருள்பணியாளர்கள் பிரிமோ மஸ்ஸோலாரி (Primo Mazzolari 1890-1959)), லொரென்சோ மிலானி (Lorenzo Milani 1923-1967)ஆகிய இருவரின் கல்லறைகளில் செபித்த பின் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி மஸ்ஸோலாரி அவர்கள் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய புனித பேதுரு ஆலயத்திலுள்ள அவரது கல்லறையில் செபித்தபின் உரையாற்றிய திருத்தந்தை, ஏழைகளின் அருகில் இருந்து, எப்போதும் அத்தகைய மக்களையே தேடிச் சென்ற அருள்பணி மஸ்ஸோலாரி போன்ற மேய்ப்பர்களை திருஅவை புறக்கணிக்காது என்று உரைத்தார்.

நானும் திருத்தந்தையை அன்புகூர்கிறேன் என்ற சுலோகத்துடன் அருள்பணி மஸ்ஸோலாரி அவர்கள் பணியாற்றியதையும், இவர் “இத்தாலியின் பங்குத்தந்தை” என அழைக்கப்பட்டதையும், திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.

கிரேமோனா மறைமாவட்டத்தில் Bozzoloவில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருள்பணி மஸ்ஸோலாரி அவர்கள், நிர்வாகத்திற்கு எதிராக இருந்தார் எனக் குறைகூறப்பட்டாலும், இவர் தனது வாழ்நாள் முழுவதும், திருஅவைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது.

அருள்பணி மஸ்ஸோலாரி அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான பணிகள் வருகிற செப்டம்பர் 18ம் தேதி ஆரம்பிக்கப்படும் என, இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

மேலும், அருள்பணி மஸ்ஸோலாரி அவர்களின் கல்லறையைத் தரிசித்த பின், தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, ‘அருள்பணி மஸ்ஸோலாரி, கடந்தகாலத் திருஅவையை நினைத்து வருந்தவில்லை, மாறாக, அன்பினால், உலகையும், திருஅவையையும் மாற்ற முயற்சித்தார்’ என்று, எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.