சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

‘தென் சூடானுக்குத் திருத்தந்தை’ புதிய பிறரன்பு நடவடிக்கை

புதன் பொது மறைக்கல்வியுரையில் ஆப்ரிக்க அருள்பணியாளர்களைச் சந்திக்கிறார் திருத்தந்தை - AP

21/06/2017 15:57

ஜூன்,21,2017. “தென் சூடானுக்குத் திருத்தந்தை” என்ற புதிய பிறரன்பு நடவடிக்கை குறித்து, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையிலான குழு, இப்புதனன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.

தென் சூடானில், இரண்டு மருத்துவமனைகள், ஒரு பள்ளி மற்றும், வேளாண் கருவிகளுக்கென, ஐந்து இலட்சம் டாலருக்கும் அதிகமான நிதியுதவியை, திருத்தந்தை வழங்குகிறார் என, கர்தினால் டர்க்சன் அவர்கள் தெரிவித்தார்.

தென் சூடானில் மறைப்பணியாற்றும் கொம்போனி சபையின் அருள்சகோதரிகள், தென்சூடானுடன் ஒருமைப்பாடு என்ற மனிதாபிமான அமைப்பு, வத்திக்கான் காரித்தாஸ் நிறுவனம் ஆகியவை வழியாக இவ்வுதவி செயல்படுத்தப்படவுள்ளது.

தென் சூடானில், பசி மற்றும், உள்நாட்டுச் சண்டையால் துன்புறும் மக்களின் நெருக்கடிநிலையை உலகுக்கு எடுத்துரைத்து, அம்மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காக, அக்டோபரில் அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை நினைத்திருந்தார், ஆனால், அந்நாட்டின் சூழ்நிலை அதற்கு இடம்தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லைகளைக் கடந்த, உலகளாவிய மேய்ப்பர் என்ற வகையில், துன்புறும் இம்மக்களின் தேவைகளை நிறைவேற்ற பன்னாட்டு சமுதாயத்தைத் தூண்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, அந்நாட்டில் இடம்பெறும் ஆயுத மோதல்களுக்கு, அமைதியான தீர்வு காணப்படுமாறும் அழைப்பு விடுத்து வருகிறார் எனக் கூறினார், கர்தினால் டர்க்சன்.

துன்புறும் தென் சூடான் மக்களுக்கு உதவும் வகையில், தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நடவடிக்கை, திருத்தந்தை அம்மக்கள்மீது கொண்டிருக்கும் அன்பு, மற்றும், ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாய் உள்ளது என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் தெரிவித்தார்.  

தென் சூடானில், 2013ம் ஆண்டு வன்முறை தொடங்கியதிலிருந்து, அந்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது ஏறக்குறைய 73 இலட்சம் மக்கள், கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர், ஒவ்வொரு நாளும் பசியினால் துன்புறுகின்றனர் எனக் கூறினார் கர்தினால் டர்க்சன்.

மேலும், இலட்சக்கணக்கான மக்கள், காலரா தொற்றுநோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர், தென் சூடானில் இடம்பெறும் சண்டையினால், 15 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர், இந்த வன்முறை மற்றும், உரிமை மீறல்களுக்கு, பெண்களும், சிறாரும் ஒவ்வொரு நாளும் பலியாகின்றனர் எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

21/06/2017 15:57