2017-06-21 15:47:00

பாசமுள்ளப் பார்வையில்…............, : பாசம் என்பது பகிர்வது


அந்த அம்மாவுக்கு 70 வயதிருக்கலாம், கைவிடப்பட்ட சிறார்களுக்கான காப்பகத்தில் ஆயாவாக வேலை செய்து வருகிறார்கள். அனைத்துச் சிறார்களும், பாட்டி, பாட்டி என்று அந்த அம்மாவையேச் சுற்றி சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு எந்த உதவி என்றாலும், முகம் சுழிக்காமல் முன்வந்து செய்வதில், அந்த தாய்க்கு அலாதி இன்பம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், அந்தkd காப்பகத்தில் வேலை செய்யும் அந்த தாயின் பூர்வீகம் குறித்து யாருக்கும் தெரியாது. அவரை யாரும் பார்க்க வந்ததும் இல்லை. அவருடன் பணிபுரியும் ஒருவரைப் பார்க்க ஒரு நாள், நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் வந்திருந்தார். தான் பார்க்க வந்தவரைச் சந்தித்துவிட்டு, வெளியே செல்லும்போது தற்செயலாக இந்த அம்மையாரைப் பார்க்க நேர்ந்த அவர், அப்படியே அதிர்ச்சிக்குள்ளானார். ‘என்ன அம்மா, நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள், எவ்வளவு பெரிய கார் கம்பெனியின் முதலாளியம்மா நீங்க. நான் உங்க கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, உங்களைப் பார்த்திருக்கிறேன். இன்னும் அந்தkd கம்பெனி, கொடி கட்டிப் பறக்கும்போது, உங்களுக்கு ஏனம்மா இந்த நிலைமை. உங்க பையனுடைய பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்திருக்கலாமே?’ என்றார் அந்த மனிதர். 'உண்மைதான். எனக்கும் வயதாகிவிட்டது, பையனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டேன். நான் அந்த வீட்டில் இருப்பதில் என் மருமகளுக்கு விருப்பமில்லை. செல்லம் கொடுத்து குழந்தைகளைக் கெடுத்து விடுவேனாம். ஊட்டியிலுள்ள தனி பங்களாவில் இருக்கச் சொன்னார்கள். சேர்ந்திருப்பது அவர்களுக்குச் சுமை. தனியாக இருப்பது எனக்குச் சுமை. அது மட்டுமல்லாமல், பாசத்தைப் பகிர்ந்துகொள்ள இதுதான் சிறந்த இடம் எனக் கண்டேன். பூவுக்குத் தேனும், மேகத்திற்கு மழையும், சிமென்ட் தொட்டிகளுக்கு நீரும், எந்தப் பயனையும் தருவதில்லை. ஏனெனில், அவை மற்றவர்களுக்காக அங்கு சேமித்து வைக்கப்படுகின்றன. அதுபோல்தான், ஒரு தாயின் பாசமும். இங்கே குழந்தைகளுடன், குழந்தைகளுக்காக வேலை செய்து அவர்கள் உணவையே உண்டு, அவர்களைப் பேரப்பிள்ளைகளாக வளர்த்தெடுப்பதில் கிட்டும் இன்பம், வேறு எங்கும் இல்லை. ஒதுக்கப்பட்ட எந்தத் தாய்க்கும் இப்படியொரு வடிகால் தேவை. அது விளைநிலத்திற்கு பாய்ச்சப்பட்டு பயன் தரட்டும்,’ என சிரித்துக்கொண்டேச் சொல்லி முடித்தார் அந்த தாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.