2017-06-21 15:54:00

மறைக்கல்வியுரை : எதிர்நோக்கில் புனிதர்களின் எடுத்துக்காட்டு


ஜூன்,21,2017. ஐரோப்பாவிற்கு இப்புதன், கோடைகாலத்தின் முதல் நாள். வெயிலின் உக்கிரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருத்தந்தையின் இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்கு முன்னர், பிறிதொரு சந்திப்பும் இடம்பெற்றது. முதலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த அமெரிக்க கால்பந்தாட்ட தேசிய குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களோடு சிறிது நேரம் உரையாடி, தன் ஆசீரையும் வழங்கியபின், புனித பேதுரு பேராலய வளாகம் நோக்கிச் சென்றார். அங்கு குழுமியிருந்த மக்களுக்கு, 'கிறிஸ்தவ எதிர்நோக்கு' என்ற தன் மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக இப்புதனன்று, 'நம் எதிர்நோக்கின் புனிதர்கள், சாட்சிகள், உடன் வாழ்வோர்' என்ற தலைப்பில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

‘நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவு பெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில்கொண்டு நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார். எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்’(11,40-12,2a)

பின், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலுள்ள இப்பகுதியை மையமாக வைத்து திருத்தந்தையின் மறைக்கல்வியுரை இடம்பெற்றது.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர்நோக்குக் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, விசுவாச அடையாளங்கள் பொறிக்கப்பட்டவர்களாக நமக்கு முன் சென்றுள்ள புனிதர்கள் குறித்து நோக்குவோம். திருப்பயணிகளாக நாம் நடைபோடும் இவ்வுலக வாழ்வில், திரண்டு வரும் மேகம் போல், சாட்சிகளாக நம்மைச் சூழ்ந்து நிற்கிறார்கள் புனிதர்கள், என்கிறது எபிரேயருக்கு எழுதிய திருமடல். திருமுழுக்கு, திருமணம், மற்றும் குருத்துவம் என்ற அருளடையாளங்கள் நிறைவேற்றப்படும்போது, நாம் இணைந்து செபிக்கும் 'புனிதர்களின் மன்றாட்டு’ வழியாக, புனிதர்களின் பரிந்துரையையும், நாம் தேர்ந்துகொண்டுள்ள அழைப்பை செம்முறையில் எடுத்துச் செல்வதற்கான அவர்களின் உதவியையும் நாடுகிறோம். கிறிஸ்தவ கொள்கை, நோக்கம் என்பது, அடைய முடியாத ஒன்று அல்ல என்பதை புனிதர்களின் வாழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. நமக்குள் எத்தனையோ பலவீனங்கள், குறைகள் இருப்பினும், நாம் இறைவனின் அருளிலும், புனிதர்களின் செபத்திலும், முழு நம்பிக்கை வைத்துச் செயல்படலாம். இவ்வுலகை மாற்றியமைக்க முடியும், மற்றும், மறு உலகு குறித்த‌ இயேசுவின் வாக்குறுதிகள் நிறைவேறும், என்ற நம்பிக்கையும், விசுவாசமும் நம்மில் நீடித்து நிலைக்க, இறையருளும் புனிதர்களின் செபமும் நமக்கு உதவுகின்றன. நாம் வாழும் இக்காலத்தில், நாமனைவரும் இயேசுவின் உயிருள்ள சாயல்களாக மாறும்பொருட்டு, நாம் புனிதர்களாக வாழ இறைவன் நமக்கு உதவுவாராக. நாம் இறைவனின் சாட்சிகளாக விளங்குவதுடன், நம் சகோதர சகோதரிகளுக்கு, குறிப்பாக, துன்புறுவோருக்கும், அழிவுறா நம்பிக்கையைத் தன்னுள் கொண்டிருக்கும் செய்திக்காக ஏங்குபவர்களுக்கும் நற்செய்தியைக் கொணரும்படி, இறைவன் நம்மைப் பலப்படுத்துவாராக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.